வரும் ஜூலை மாத இறுதிக்குள் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய நிலையில், இந்த முறை, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 49 சதவிகித வாக்குகளே உள்ளன. இதையடுத்து திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள். அந்த வகையில், 2017 -ம் ஆண்டு தேர்தலில் 65.5 விழுக்காடு வாக்கு பலத்துடன் இருந்த பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தற்போது 48.8 விழுக்காடு வாக்குகளே உள்ளன. இந்த சூழலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், அவற்றின் வாக்கு சதவீதம் 51 விழுக்காடாக இருக்கும்.
நாடாளுமன்றத்தை பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களவையில் 307 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் 100 உறுப்பினர்கள் என்கிற வலுவான நிலை உள்ளது. இதனால் பெரும்பான்மையை பெறுவதில் பாஜகவுக்கு சிக்கல் ஏதுமில்லை.
மாநிலங்களை பொறுத்தவரை தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.
2017-க்குப் பிறகு, சிவசேனா, அகாலி தளம் மற்றும் தெலுங்கு தேசம் ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சியில் இல்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர்ந்தாலும், தமிழகத்தில், திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால், மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை தேவையான அளவு பெறுவதில் பாஜகவுக்கு சிக்கல்கள் உள்ளன. எனவே, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரின் ஆதரவைப் பெற பாஜக முயற்சி செய்து வருகிறது.
மேலும், ஜூன் மாதத்திற்குள் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக 72 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதனால் நிலைமை சற்று மாறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM