ஓசூர்: அய்யூர் காப்புக்காட்டில் கோடையிலும் வற்றாத சாமி ஏரி வற்றாமல் உள்ளதால் அங்கு வன விலங்குகள் குடிநீருக்காக நம்பிக்கையுடன் நாடிவருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக காப்புக்காடுகளில் உள்ள இயற்கையில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் கோடையிலும் வற்றாமல் வனவிலங்குகளின் தாகம் தணிக்கும் நீர்நிலையாக அய்யூர் காப்புக்காட்டில் உள்ள சாமி ஏரி விளங்கி வருகிறது. ஓசூர் வனக்கோட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் உள்ள காப்புக்காடுகளில் யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி, புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு அரியவகை பட்டியலில் உள்ள வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக இங்குள்ள அடர்ந்த காப்புக்காடுகளில் இயற்கையின் கொடையாக 50-க்கும் மேற்பட்ட ஏரிகள், குட்டைகள் அமைந்துள்ளன.
மேலும் 10-க்கும் மேற்பட்ட செயற்கையான தண்ணீர் தொட்டிகளை வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆண்டுதோறும் கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இங்குள்ள நீர்நிலைகள் வேகமாக வற்றி விடும் நிலையில், இதற்கு விதிவிலக்காக அய்யூர் காப்புக்காட்டில் உள்ள சாமி ஏரியில் மட்டும் கோடை வெயிலிலும் தண்ணீர் வற்றாமல் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியாக உள்ள சாமி ஏரியை சுற்றிலும் மலைகள் அரணாக சூழ்ந்துள்ளதால், சாமி ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் உள்ளது. இந்த நீர்நிலையை அறிந்த யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வெகு தொலைவில் இருந்தும் கூட நம்பிக்கையுடன் சாமி ஏரியை நாடி வந்து தாகம் தணித்துச் செல்கின்றன. அய்யூர் காப்புக்காட்டில் இயற்கையாக அமைந்துள்ள இந்த சாமி ஏரி வனிவலங்குகளின் தாகம் தணிக்கும் வற்றாத ஜீவ ஊற்றாக திகழ்கிறது.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் கூறும்போது, ”அய்யூர் வனத்தில் இயற்கையாக அமைந்துள்ள சாமி ஏரியில் கடுமையான கோடைகாலத்திலும் தண்ணீர் வற்றாமல் எப்பொழுதும் நிரம்பி காணப்படுகிறது. நடப்பு கோடை வெயிலிலும் இந்த சாமி ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நாடி வரும் முக்கிய நீர்நிலையாக சாமி ஏரி உள்ளது” என்றார்.