இஸ்லாமாபாத், : பாகிஸ்தானில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அமைச்சரவையில், 34 பேர் அமைச்சர்களாக நேற்று பதவி ஏற்றனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லிமென்டில், சமீபத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்தது.
இதை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரரும் அவரது பாக்., முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவருமான ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வானார். இவர் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. ஆனால், இம்ரான் கான் கட்சியை சேர்ந்தவரும், பாக்., அதிபருமான ஆரிப் அல்வி, ‘பதவிப் பிரமாணம் செய்து வைக்க மாட்டேன்’ என, கூறியதை அடுத்து நிகழ்ச்சி நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த விழாவில், அதிபருக்கு பதிலாக, செனட் தலைவர் சாதிக் சஞ்ராணி, புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.மொத்தம், 31 அமைச்சர்கள் மற்றும் மூன்று இணை அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றனர். பிரதமரின் பாக்., முஸ்லிம் லீக் கட்சியில் 13 பேருக்கும், பாக்., மக்கள் கட்சியில் ஒன்பது பேருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. மீதியுள்ள இடங்கள் கூட்டணி கட்சியினருக்கு வழங்கப்பட்டன.
புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் விரைவில் ஒதுக்கப்பட உள்ளன.பாக்., மக்கள் கட்சி தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரிக்கு வெளியுறவுத்துறை வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சரவைப் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.
Advertisement