பாட்னா, : பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காத காரணத்தால், டீ கடை திறந்த பீஹார் பெண்ணை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாட்னாவை சேர்ந்த பிரியங்கா குப்தா என்ற பெண், 2019ல் பொருளாதாரத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை தேடி அலைந்தும், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை.இதையடுத்து, பாட்னாவில் உள்ள பெண்கள் கல்லுாரி அருகே, டீ கடை திறந்துள்ளார்.
இது குறித்த தகவலை, அவர் தன் சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டார். இதை பார்த்த பிரபுல் பில்லோர் என்ற இளம் தொழிலதிபர், பிரியங்காவுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார். பீஹாரை சேர்ந்த பிரபுல் பில்லோர், எம்.பி.ஏ., படிப்பை தொடர முடியாமல் பாதியில் கைவிட்டு, டீ கடை துவக்கினார். அதை வெற்றிகரமாக நடத்தி, இன்று ஆண்டுக்கு 4 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறார். ‘எதற்கெடுத்தாலும் அரசையே குறை கூறாமல், சொந்த முயற்சியில் களம் இறங்கியுள்ள வீரமங்கை பிரியங்காவுக்கு வாழ்த்துகள்’ என, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Advertisement