திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கூறி தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உட்பட போலீசாரை கொல்ல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதை தொடர்ந்து திலீப், அவரது தம்பி அனூப், தங்கை கணவர் சுராஜ் உள்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். மேலும் இந்த விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் திலீப் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், ஏப்ரல் 19ம் தேதி (நேற்று) உத்தரவு வழங்குவதாக தெரிவித்திருந்தது. நேற்று மனுவை விசாரித்த நீதிபதி சியாத் ரகுமான் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை, மே 30ம் தேதிக்குள் முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திலீப்பின் தங்கை கணவரான சுராஜ் குறித்து 3 வாரங்களுக்கு பத்திரிகைகள் எந்த தகவலையும் வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.