தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் கிடக்கும் அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டதால், அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையை இடிக்கக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆலை வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் அபாயகரமான கழிவுகளால் அப்பகுதியில் மண் மாசடைந்து விட்டதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆலை நிர்வாகம் தரப்பில், செம்பு கழிவுகள் அபாயகரமானதா? இல்லையா? என்பதை கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தீர்வு நடவடிக்கை என்ன என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், நான்கு வாரங்களில் இதுசம்பந்தமாக விளக்கமளிக்கவும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM