வாஷிங்டன் : ”இந்தியா மிகச் சிறப்பாக திட்டமிட்டு கொள்கைகளை செயல்படுத்தி வருவதால், குறைந்த நிதியாதாரத்திலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலையாக மீட்டெடுத்துள்ளது,” என, சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஜி – 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவாவை சந்தித்து பேசினார். இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நிர்மலா சீதாராமன், கிறிஸ்டலினா ஜியார்ஜிவா சந்திப்பின்போது, உக்ரைன் போரால் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட சவால்களை சமாளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, மத்திய அரசு செயல்படுத்தி வரும் கொள்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன், கிறிஸ்டலினாவிடம் எடுத்துரைத்தார். சிறப்பான நிதிக்கொள்கைகள், முக்கிய சீர்திருத்தங்கள், மூலதனச் செலவினங்களை அதிகரித்தது போன்றவற்றின் வாயிலாக, கொரோனா பரவலை சமாளித்து, நாட்டின் பொருளாதாரம் மீட்சியடைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கு, இந்தியா திட்டமிட்ட இலக்குடன் கொள்கைகளை வகுத்து செயல்படுத்தி வருவதால், குறைவான நிதிஆதாரங்களை வைத்து பொருளாதாரத்தை மீட்சிப் பாதைக்கு திருப்ப முடிந்ததாக கிறிஸ்டலினா தெரிவித்தார். அத்துடன் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவிக்கும் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.’கிரிப்டோகரன்சி’ எச்சரிக்கைஅமெரிக்காவில் கருத்தரங்கு ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
நிதி தொழில்நுட்ப துறையில் புரட்சி நடக்கிறது. எனினும் ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணய பரிவர்த்தனைகளில் சட்ட விரோத பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி போன்ற பிரச்னைகளும் உள்ளன. இவை தான் அனைத்து நாடுகளுக்கும் உள்ள மிகப் பெரிய இடர்பாடுகள். இதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது தான் ஒரே தீர்வாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement