இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசில் 31 கேபினட் அமைச்சர்கள் 3 இணை அமைச்சர்கள் உள்பட 34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த பதவியேற்வு விழாவில் அதிபர் ஆரிப் ஆல்வி கலந்து கொள்ளவில்லை. இதனால் அவருக்கு பதில் பாகிஸ்தான் பாராளுமன்ற சென்ட் தலைவர் சாதிக் சஞ்சரானி புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய உள்துறை அமைச்சராக ராணா சனாவுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி காலியாக உள்ள நிலையில், வெளியுறவுத்துறை இணை அமைச்சராக ஹினா ரப்பானி கர் பதவியேற்றார்.
புதிய சுகாதார அமைச்சராக பாகிஸ்தான் மக்கள் கட்சி அப்துல் காதர் படேல் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. அப்துல் காதர் மீது நில பேரம், மின்சார திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அப்துல் காதர் படேலுக்கு ஜாமின் வழங்கி உள்ளதாக பாகிஸ்தான் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.