றம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற கலவரத்துடன், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனம் தீவிரமடைந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு பிரபல சர்வதேச ஊடகங்கள் தலைப்பு செய்திகளாக செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள் பவுஸரிற்கு தீ வைக்க முயற்சித்த போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மனிதாபிமானமற்ற முறையில் நிராயுதபாணியான பொதுமக்களை சுட்டுக் கொல்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்? என பல தரப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் விசேட பதிவொன்றை பதிவிட்டுள்ளார். நேற்று றம்புக்கனையில் இடம்பெற்ற கொடூரமான சம்பவத்திற்கு ஜூலி சுங் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் பிரபல ஊடகமான பிபிசி, அல்ஜஸீரா, ஸ்கை நியூஸ், ரொய்ட்டர்ஸ் போன்ற ஊடகங்கள் றம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தை பிரதான செய்தியாக முன்னிலைப்படுத்தி வெளியிட்டுள்ளன.
பொது மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் உலக நாடுகளின் உதவியை இலங்கை கோரியுள்ளது. இவ்வாறான நிலையிமையில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.