பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹுப்ளி காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 89 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
கர்நாடகாவின் தார்வாட் மாவட்டம் ஹுப்ளியில் கடந்த 17-ம் தேதி முஸ்லிம்களை குறிவைத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதனை பரப்பிய அபிஷேக் ஹிரேமத் (27) கைது செய்யப்பட்டு, வரும் 23-ம் தேதிவரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் பழைய ஹுப்ளி காவல் நிலையம் முன்பு நள்ளிரவில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீஸாருக்கும், முஸ்லிம் அமைப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கலவரத்தில் முடிந்தது. காவல் நிலையம், காவலர்களின் வாகனங்கள், அரசு பேருந்து ஆகியவற்றின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய தடியடியில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
8 தனிப்படைகள் அமைப்பு
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவதை எக்காரணம் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாது. அது கடுமையான குற்றமாகும். அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கைக்கு ஆளாவார்கள். இந்த வழக்கில் போலீஸார் அப்பாவிகள் யாரையும் கைது செய்யவில்லை” என்றார்.