ஜம்மு : ”ஜம்மு – காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட ஒருகாலத்தில் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. இப்போது பயங்கரவாத சூழலை அழித்து அமைதியை நிலைநாட்டும் வல்லமை நம் பாதுகாப்பு படையினருக்கு உள்ளது,” என, லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
ஜம்மு – காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அமர்நாத் யாத்திரையின் போது பக்தர்களின் பாதுகாப்புக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் நம் படையினர் தகுந்த பதிலடி தருவர். அமைதியை நிலைநாட்ட எதையும் செய்ய நம் வீரர்கள் தயாராக உள்ளனர்.ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முதுகெலும்பு ஏற்கனவே உடைக்கப்பட்டு விட்டது.
இங்கு அமைதியை நிலைநாட்ட ஒருகாலத்தில் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. இப்போது பயங்கரவாத சூழலை அழித்து அமைதியை நிலைநாட்டும் வல்லமை நம் பாதுகாப்பு படையினருக்கு உள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு – காஷ்மீரில் 38 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன.
இதன் வாயிலாக நான்கு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளது.உணவு பதப்படுத்தல், சுகாதாரம், ரியல் எஸ்டேட் துறைகளை சேர்ந்த பல சர்வதேச நிறுவனங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன.
பஞ்சாயத்து ராஜ் தினமான 24ல் ஜம்மு – காஷ்மீர் வரும் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுதும் உள்ள பஞ்சாயத்துகளுடன் இங்கிருந்தபடி உரையாற்ற உள்ளது எங்களுக்கு கிடைத்த பெருமை.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement