கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 12

கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 12

பா. தேவிமயில் குமார்

சொல்லிவிடு… வெள்ளி நிலவே !

இப்படித்தான்
அவளும்
உன்னுடன் உரையாடினாளா ?
ஒளி நிலவே !

பூக்களைப் பார்த்து
புன்னகைத்திட
நேரம் இருந்ததா ?

வெளிப்படுத்த முடியா
உணர்வுகளை
ஓவியங்களாகத் தீட்டினாளா ?

அடிமைப்படுகிறோம்
என அறிந்தாளா ? இல்லை
அன்பின் வழியென மகிழ்ந்தாளா ?

நலமா ? என அவளை
யாரேனும் கேட்டார்களா ?

மகப்பேறும், மாதவிடாயும்
மறித்து நின்றதா ?
அவளின் வெளிவேலைகளை ?

குழுச் சண்டையில்
குமரிப் பெண்களின்
கதறல் கேட்டதா ? உனக்கு

தீயிடப்பட்ட உணவுகளை
தயாரிக்க ஆரம்பித்தவளின்
தீப்புண் இன்றும் தொடர்கிறது !

ஆத்திரக்கார ஆண்வர்க்கம்
அடித்த போது திரும்ப
அடித்தாளா? நிலவே !

ஒலி வடிவில் பகிர்ந்தாளா
உளைச்சல்களை,
உன்னுடன் ? இரவெல்லாம் !
என்னைப்போலவே…

சக்கரத்தை கண்டுபிடித்து
சரித்திரம் படைத்தவள்
அவளாகவும் இருக்கலாம் நிலவே !

ஆனால் எங்கள்
மரபணுவில்
உருவகப்படுத்திவிட்டோம்
வென்றொன்றுமில்லை…
ஆண்தான் உயர்ந்தவனென்று !
எனவேதான்….
ஆதிமனிதன் நெருப்பை….
ஆதிமனிதன் சக்கரத்தை….
ஆதிமனிதன் பயிர் தொழிலை….
கண்டு பிடித்தானென்று !
கண்களுக்குள்ளும் காட்சியை
விரிய விடுகிறோம் !
நீ தானே சாட்சி
அவள் கண்டுபிடித்ததற்கு…
வெள்ளி நிலவே !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.