புதுடெல்லி: டெல்லியில் கடந்த சனிக்கிழமை மத ஊர்வலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது மற்றொரு தரப்பினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் வன்முறை வெடித்தது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், வன்முறை தொடர்பாக இதுவரை இரு பிரிவுகளையும் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை தொடர்பாக க்ரைம் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். 14 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தப் பிரிவு, எந்த மதமாக இருந்தாலும் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வதந்திகள் பரப்பி அமைதியை சீர்குலைப்பதைத் தடுக்க சமூக வலைத்தளங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறியுள்ளார்
இந்நிலையில், இந்த வழக்கில் சோனு, தில்ஷாத், அன்சார், சலீம், இமாம் ஷேக் ஆகிய 5 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக திங்கள்கிழமையன்று, டெல்லி காவல் ஆணையரிடம் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கில் இதுவரை கைதானவர்களில் மூன்று பேர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைதானவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கிகள், கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.