ரவீனா டண்டன் 1990-களில் தில்வாலே, மொஹ்ரா உள்ளிட்ட பாலிவுட் ஹிட் படங்களின் கதாநாயகி. இப்போது KGF-2 படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். KGF-2 படத்தின் வெற்றி தரும் மகிழ்ச்சியை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ரவீனா. KGF-2 படத்தின் முதல் பாகம் 2018-ல் வெளியாகி பெரியளவில் வெற்றி விற்றது. அதனை விட பிரமாண்டமாக உருவாகி இருக்கும் அதன் சாப்டர் 2 ரசிகர்களை ஈர்க்கத் தவறவில்லை. திரைக்கு முன்பு ரசிகர்கள் உற்சாகமாக சில்லறைகளை சிதற விடும் காட்சியை பகிர்ந்த ரவீனா, “நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு முன் சில்லறைகள் சிதற விடப்படுவதை பார்க்கிறேன்” என கேப்ஷன் பதிவிட்டு இருந்தார். அதற்கு தொடர்ச்சியாக கடைசி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் இனிய நினவுகள் என்கிற ஹாஷ்டேக் உடன் பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் உற்சாகமாக கமென்ட் செய்து வருகின்றனர்.
பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களை ஒப்பிட்டு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் ரவீனா. அதில், “பாலிவுட் படங்கள் ஹாலிவுட் போல மாற விருப்படுகின்றன. மாறாக தென்னிந்திய படங்கள் இந்திய கலாசாரம், பழக்கவழக்கங்கள் இதனைச் சுற்றி படங்கள் எடுக்கப்படுகின்றன. அதனால் மக்களுக்கு எளிதாக கனெக்ட் ஆகி படம் ஹிட் ஆகிறது. மக்களின் உணர்வுகளை பேசுகிற படம் கண்டிப்பாக ஹிட் ஆகும். மேலோட்டமாக உணர்வுகளை பற்றி எடுப்பது வேலைக்கு ஆகாது” என தெரிவித்து இருக்கிறார்.
KGF-2 படத்தில் ராமிகா சென் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரவீனா, இந்த வருடத்தில் வெளியான நெட்பிலிக்ஸ் சிரீஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். இதற்கு முன் தமிழ் படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். 1994-ல் பி.வாசு இயக்கத்தில் உருவான ‘சாது’ என்கிற படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.