உக்ரைன் – ரஷ்யா மோதலால் வளரும் நாடுகளில் பாதிப்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை

நியூயார்க்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கி 8-வது வாரம் வந்துவிட்ட நிலையில் அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது.

இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணைப் பிரதிநிதி ரவீந்திரா இந்தியாவின் நிலைப்பாட்டினை எடுத்துரைத்துப் பேசினார்.

அப்போது அவர், “ரஷ்யா, உக்ரைன் மோதல் விவகாரத்தில் இந்தியா ஆரம்பம் முதலே ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. இருதரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். வன்முறையை விடுத்து தூதரக உறவு ரீதியாக தீர்வு காண வேண்டும். அப்பாவி மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கும் போது பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்க முடியும்.

இதற்கு முன்னால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடியபோது இருந்த நிலையைவிட உக்ரைனில் இப்போது நிலவரம் மோசமாகியுள்ளது. குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அகதிகளாக வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகளே. இந்தியா தன்னால் இயன்ற நிவாரண உதவிகளை உக்ரைனுக்கு செய்து வருகிறது. இனியும் செய்யும்.

இச்சூழலில், உக்ரைன்-ரஷ்யா மோதலின் தாக்கம் உலக நாடுகளை ஆட்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. உணவுப் பொருள் பற்றாக்குறை, எரிபொருள் விலை ஏற்றம் என வளரும் நாடுகளை இந்தப் போர் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது. இவற்றையெல்லாம் கூட்டு முயற்சியின் மூலமே சரி செய்ய முடியும். எனவே இருதரப்பும் உடனே பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்.

உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர உரிய வழிவகை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வலியுறுத்துகிறோம்.

உக்ரைனில் சிக்கியிருந்த 22,500 இந்தியர்களை ஆப்பரேஷன் கங்கா மூலம் பத்திரமாக மீட்டுவிட்டோம். இதற்காக 90 விமானங்களை இயக்கினோம். இந்தியர்கள் மட்டுமல்லாது 18 நாடுகளைச் சேர்ந்தவர்களை உக்ரைனில் இருந்து மீட்க உதவியுள்ளோம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.