நிலக்கரி பற்றாக்குறையால் மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மின்சாரப் பிரச்னையை எதிர்கொள்வதாக மகாராஷ்டிர எரிசக்தி அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிராவின் மின் விநியோகம் குறித்து பேசிய அமைச்சர் நிதின் ராவத், “நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிராவில் மட்டும் அல்ல, இந்தியாவின் 12 மாநிலங்களில் மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொழில்துறை நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதற்கு குஜராத் மாநிலம் முழு மின் நிறுத்த நாளை அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் 40% மின் விநியோகத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் இதே நிலை உள்ளது. இத்தகைய சூழலில் மைக்ரோ லெவல் திட்டமிடல் மூலம் மின் பற்றாக்குறையை குறைக்க மாநில எரிசக்தி துறை செயல்பட்டு வருகிறது” என்றார்
மேலும், “போதிய ரயில்வே ரேக்குகள் இல்லாததால் இந்த நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஒரு நாளைக்கு 37 ரேக்குகள் நிலக்கரி தேவை, ஆனால் தற்போது எங்களுக்கு 26 ரேக்குகள் மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு ரேக்கும் 4,000 மெட்ரிக் டன் நிலக்கரி எடுத்து வரப்படுகிறது. தற்போது மாநிலத்தில் மின் பற்றாக்குறை 15% ஆக பதிவாகியுள்ளது’’ என்று கூறினார்.
கோடைக் காலம் சுட்டெரிக்கும் இந்த வேளையில் மகாராஷ்ட்டிர மாநிலத்தின் மின்சாரத் தேவை 24,500 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது. அரசு நடத்தும் மகாஜென்கோ மூலம் 9,330 மெகாவாட் மின்சாரம் அனல் மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் சூழலில், மேலும் 8,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக ராவத் கூறினார். மேலும், ஒரு லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யவும் மகாஜென்கோ டெண்டர் விட்டுள்ளது என்றார்.
கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 760 மெகாவாட் மின்சாரம் வாங்க மகாராஷ்ட்டிர அமைச்சரவை சமீபத்தில் அனுமதித்துள்ளது. இதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.50 முதல் 5.70 வரை வாங்கப்படுகிறது. மேலும், ஜூன் 15ம் தேதி வரை தினமும் 673 மெகாவாட் மின்சாரத்தை என்டிபிசி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM