சென்னை அம்பத்தூரில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த பரத்வாஜ் – லதா தம்பதிக்கு 14 வயதில் தவஜ் என்ற ஒரு மகன் இருந்தார். ஆறு வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த லதாவுக்கு அவரது கணவர் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதுநாள் வரையில் வீட்டுச் செலவு, குடும்பச் செலவுக்கு அந்த பணத்தை வைத்து சமாளித்து வந்த லதா, பணம் முடிந்து போனதும் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி லதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
காலையில் வெகுநேரமாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது தாயும், மகனும் உயிரிழந்து கிடந்தனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.