"RSS காரர்கள் என்னை கம்யூனிஸ்ட் என்று திட்டுகிறார்கள்!"- நினைவுகள் பகிரும் ஜெயமோகன்

“நீங்கள் சினிமாவில் பணியாற்றுகிறீர்கள். வாசகர் வட்டத்தில் இருக்கிறீர்கள். அரசியல் சார்ந்து சில விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். பல ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறீர்கள். இவ்வளவு வேலைகள் செய்துகொண்டே எப்படி எழுத்துப் பணியில் தவறாமல் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே வருகிறீர்கள்?”

“என்னுடைய வேலை எழுதுவதுதான். நான் நிறைய விஷயம் செய்தாலுமே, ப்ராக்டிகலாக எதையும் செய்வது இல்லை. விஷ்ணுபுரம் விருதுகள்கூட எல்லாமே நான் வேலை பார்ப்பது கிடையாது. அதை எல்லாமே என் நண்பர்கள் தான் செய்கிறார்கள். அதைப் பண்ண வைப்பதற்கான ஒருங்கிணைப்பு என் மூலம் நடக்கிறதே ஒழிய, அதில் என்னுடைய பணி என்பது பெரிய அளவில் இல்லை. நானே இறங்கி செய்யக்கூடிய வேலை என்பது இலக்கியம் மட்டும்தான்.”

ஜெயமோகன்

“நீங்கள் ஒரு வலதுசாரி சிந்தனை உடைய எழுத்தாளரா?”

“வலதுசாரி, இடதுசாரி என்பது இலக்கியத்தில் அரசியல்வாதிகள்தான் போடுவார்கள். வாசகர்கள் போட முடியாது. பாரதியை எந்த சிந்தனை உடைய எழுத்தாளர் என்று சொல்வீர்கள்? புரட்சி பற்றி எழுதிய அவர் தான் தோத்திர பாடல்களும் எழுதியிருக்கிறார். இந்த அடையாளங்களில் எந்த எழுத்தாளரும் சிக்க மாட்டார்கள். அப்படி சிக்கக்கூடியவர்கள் எழுத்தாளர்களே அல்ல. அவர்கள் வெறும் கட்சி பிரசாரம் செய்யக்கூடியவர்கள்தான்.”

“ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான உங்களது பார்வை என்ன?”

“நான் என்னுடைய இளமை பருவத்தில் ஆர்.எஸ்.எஸ்-இல் தீவிர செயல்பாட்டாளராக இருந்தேன். அதன்பிறகு என்னுடைய நம்பிக்கை அதிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தது. சார்பு நிலை என்பது எழுத்தாளனுக்கு ஒரு கல்லறை. எந்த ஒரு தனி மனிதர்களுக்கும், தனி அமைப்புகளுக்கும் நான் என்னுடைய விசுவாசத்தைக் கொடுக்கமுடியாது. அதேபோல எந்தவொரு அமைப்பிற்கெதிராகவும், தனிமனிதருக்கு எதிராகவும் என்னால் புறக்கணிப்பைக் காட்டமுடியாது. இதையெல்லாம் நான் வைத்திருந்தால் என்னால் வெண்முரசு, கொற்றவை எழுதியிருக்க முடியாது. நான் சார்பு இல்லை என்பதற்கான ஆதாரமே என்னுடைய நாவல்கள் தான். என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லி திட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள் இணையத்தில் இருக்கிறது. அதே போல என்னை ஆர்.எஸ்.எஸ் என்று கம்யூனிஸ்ட்காரர்கள் திட்டி எழுதிய பக்கங்களும் இருக்கிறது.

பின்தொடரும் நிழலின் குரல்

இந்த நிலைப்பாடுகள் என்பது அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. அதை ஒருபோதும் ஒரு எழுத்தாளன் ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதகுலத்தின் மீதுள்ள பற்றில் தான் ஒரு எழுத்தான் எழுத முடியும். மனிதாபிமானத்திற்காக தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அப்படிப் பார்க்கும்போது நானும் டால்ஸ்டாயும் ஒன்றுதான். நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு புதிய உலகத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறோம். இப்போது நான் இறந்துப் போய் பத்து நாட்களில் எல்லாரும் என்னை மறந்துவிட்டால் கூட அது எனக்குப் பிரச்னை கிடையாது. நான் வந்தேன், செய்யக்கூடியதை செய்துவிட்டேன். லாபம் நோக்காது மனிதாபிமானத்திற்காக எழுதக்கூடிய அனைத்து எழுத்தாளர்களுமே முற்போக்கு எழுத்தாளர்கள் தான்.”

“நீங்கள் இளம்வயதிலிருந்தே துறவு பக்கம் போக வேண்டுமென்று ஆசைக் கொண்டதாகவும், தற்போதுகூட தாங்கள் நித்ய சைதன்ய போன்ற குருமார்களின் பரம்பரையில் இருப்பதாக சொல்கிறார்கள். அது பற்றி…”

“மிக இளமை காலத்திலேயே ஒரு ஆன்மிக ஈடுபாடு எனக்கு வந்துவிடுகிறது. ஆனால் அது கடவுள் சார்ந்த ஈடுபாடு கிடையாது. என்னுடைய நெருக்கமான நண்பர் ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துக்கொள்கிறார். அது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது, கிட்டத்தட்ட 20 நாட்கள் நான் எங்கு இருக்கிறேன் என்று கூட தெரியாமல் கடுமையான மனஅழுத்ததிற்கு ஆளானேன். அப்போது திருவண்ணாமலை, பழனி, காசியில் எல்லாம் சாமியாராகவும், பிச்சைக்காரனாகவுமெல்லாம் இருந்திருக்கிறேன். இங்கு மனித குலத்தின் மேல் உள்ள நம்பிக்கையின்மீது அடிப்படையான கேள்வி ஒன்று எழுகிறது. ஒரு நண்பன் இறந்து போகிறான், மூன்று மாதத்தில் அவனை எல்லாரும் மறந்துவிட்டால், நான் உயிரோடு இருப்பதற்கு என்ன அர்த்தம்? இளம்வயது சாவு என்பது பெரிய கேள்விகளைக் கொடுக்கும். அந்தக் கேள்விகளுக்கான விடை தான் நம் ஆன்மிகப் பாதையைத் தீர்மானிக்கிறது. அதற்கு வெவ்வேறு துறவிகள், ஆன்மீக ஞானிகள் ஆகியோரைத் தேடி செல்கிறோம். அதில் சிலர் உண்மையிலே ஞானியாக இருக்கலாம். ஆனால் உங்கள் நோய்க்கான மருந்து அவர்களிடம் இருக்காது. சில போலியானவர்கள் இருக்கலாம். ஏனென்றால் எது நுட்பமானதோ, அங்குதான் போலிகள் அதிகம் இருக்கும்.

நித்ய சைதன்ய யதி

அதனால் கவிதையிலும், ஆன்மிகத்திலும்தான் போலி அதிகம். உங்களுக்குக் கவிதை தெரிந்தால் தான் யார் அசல் கவிஞன், போலி கவிஞன் என்று கண்டுபிடிக்க முடியும். அதேபோல் உங்களுக்கு ஆன்மிகம் தெரிந்தால்தான் எது உண்மை, எது போலி என்று கண்டுபிடிக்க முடியும். அதன் பிறகு 91-ல் யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கிறேன். பின் ஆறு மாதம் கழித்து நித்ய சைதன்ய யதியை சந்திக்கிறேன். அவர் நாராயண குருவின் மாணவர். அவர் தான் என்னுடைய ஆசிரியர். எனக்கு வேறு ஒருவர் கூட ஆசிரியராக இருக்கலாம். ஆனால் நித்ய சைதன்ய டால்ஸ்டாய் படித்தவர். இந்திய வரலாறு அறிந்தவர், உலகம் முழுவதும் பயணம் செய்தவர். அதனால் தான் அவரை எனக்கான ஆசிரியராக தேர்வு செய்தேன். அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவர் பெயர் சொல்லாமல் நான் இருந்தது கிடையாது. ஏதாவது ஒரு உரையில் அவர் பெயரை சொல்லிவிடுவேன். அவர்மீது ஒரு பெரும் பற்று எனக்கு உருவானது. ஆசிரியரிடம் உருவாகும் அந்த பெரும் பற்றானது உங்களுக்கு காதலி மீது உருவாகாது, குழந்தைகளிடம்கூட உருவாகாது.”

“உங்களது காதல் கதை குறித்து…”

அருண்மொழி நங்கை

“அருண்மொழி முதலில் என் வாசகியாக தான் அறிமுகமானாள். அவள் மதுரை வேளாண் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது என்னுடைய ரப்பர் நாவல் வெளியானது. அதற்கு அவள் வாசகர் கடிதம் எழுதினாள். அதன்பின் ஒரு நாள் நான் பி.கே.பாலகிருஷ்ணனை சந்திக்கப் போகும்போது அவளைச் சந்திக்கிறேன். பார்த்தவுடனேயே எனக்கு அவளைப் பிடித்துவிட்டது. சங்கச் சித்திரங்கள் என்னும் புத்தகத்தில் அவளை நான் சந்தித்த தருணத்தைக் குறித்து எழுதியிருப்பேன். மதுரை வேளாண் கல்லூரியைச் சுற்றி கொன்றைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நாங்கள் அப்படியே பேசியபடியே நடந்துவந்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென அவள் புத்தகத்தால் மரத்தின் மீதிருக்கும் பூவை தட்டிவிட்டாள். அது அப்படியே எங்கள் மீது விழுந்தது. அந்த இடத்தில் நான் அவள் மீது காதல்வயப்பட்டு, என்னுடைய காதலை வெளிபடுத்தினேன். பின்பு நாங்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டோம். அவள் என் தீவிர வாசகியாக இருந்தபோது எழுதிக் கொண்டிருந்தாள். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பனி உருகுவதில்லை என்னும் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளாள். இந்த வருடத்தில் மிகவும் அதிகம் படிக்கப்பட்ட புத்தகமாக அது இருக்கிறது.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.