புதுடெல்லி,
இந்து மத கடவுளான அனுமனின் பிறந்தநாள் தினம் ’அனுமன் ஜெயந்தி’ என கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி தினம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் அனுமன் ஜெயந்தியையொட்டி மத பேரணிகளும் நடைபெற்றது. இந்த பேரணியின் போது சில பகுதிகளில் வன்முறை, மோதல் சம்பவங்களும் அரங்கேறியது.
இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். ஜஹாங்கீர்பூரி சி-பிளாக் பகுதியில் இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் பேரணி சென்றபோது பேரணி மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியது. மோதலில் போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இதனை தொடந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடந்து வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளி அன்சர் ஷேக் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் இளஞ்சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறையின் முக்கிய குற்றவாளி அன்சர் ஷேக் உள்பட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் வன்முறை நடந்த ஜஹாங்கீர்பூரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இன்று இடிக்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு உள்பட்ட ஜஹாங்கீர்பூரி பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி இன்றும் நாளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பு பணிக்காக 400 போலீசாரை ஈடுபடுத்தும்படி டெல்லி போலீஸ் கமிஷனருக்கு மாநகராட்சி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.
வன்முறை நடந்த பகுதியில் சட்டவிரோதமாக கட்டிடப்பட்ட கட்டிடங்கள் இடிக்கும் பணி இன்று நடைபெற உள்ளதால் ஜஹாங்கீர்பூரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.