டோக்கியோ,
உக்ரைன் மீதான ரஷிய போர் 2-வது மாதமாக நடந்து வருகிறது. இந்த வேளையில், உக்ரைனுக்கு ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சிறப்பு உடைகள், முககவசங்கள் மற்றும் டிரோன்களை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி ஜப்பான் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “உக்ரைன் அரசுக்கு ஜப்பான் ராணுவ அமைச்சகம் என்.பி.சி. சூட்டுகள் (அணு, உயிரி, ரசாயன ஆயுத தாக்குதலுக்கு எதிரானவை), முககவசங்கள், டிரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது. தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரைனியர்களின் போராட்டம் தொடர்கிறது. இதனால் ஜப்பான் ராணுவ அமைச்சகம், உக்ரைன் நாட்டுக்கு தனது அதிகபட்ச ஆதரவைத் தொடரும்” என கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், ஜப்பான் குண்டு துளைக்காத உள்ளாடைகள், தலைகவசங்கள், வெப்ப ஆடைகள், கூடாரங்கள், சுகாதார பொருட்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவற்றை உக்ரைனுக்கு வழங்கியது நினைவுகூரத்தக்கது.