மதுரைத் தெருக்களின் வழியே 12: `தினசரி 4 காட்சிகள்' – 80 களில் தியேட்டர்களில் படம் பார்த்த கதைகள்!

எண்பதுகளில்கூட திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அரங்கில் இருந்து வெளியேறினாலும் சிலர் எப்பொழுதும் சினிமாப் பித்துப் பிடித்த மனநிலையில் இருந்தனர். எனக்குத் தெரிந்த ஒருவர் – பஞ்சாலைத் தொழிலாளி – ஒரு குறிப்பிட்ட நடிகை நடித்த திரைப்படங்களைப் பல தடவை பார்ப்பார். அவருக்குக் கஞ்சா புகைக்கிற பழக்கம் உண்டு. ஒரு கட்டத்தில் அந்த நடிகை மீதான அளவு கடந்த காதலால் பித்தனாகிப் போவார். அவர் அவ்வப்போது ஏதாவது ஒரு தாளில் பென்சிலால் கிறுக்கிக்கொண்டு இருப்பார். ”என்ன எழுதுறீங்க?” என்று கேட்டால், அந்த நடிகைக்குக் கடிதம் எழுதுகிறேன் என்று சொல்லுவார். சரி, போகட்டும். சில இளைஞர்கள் தங்களுடைய விருப்பத்திற்குரிய நடிகைகளுக்குப் பாராட்டுதலுடன் கடிதம் எழுதி, அவருடைய போட்டோவைக் கேட்டனர். சில வேளைகளில் கடிதம் எழுதியவருக்குச் சில நடிகைகள் கையெழுத்திட்ட போட்டோ அஞ்சலில் வரும். கல்லூரி விடுதியில் எனது பக்கத்து அறை நண்பருக்கு நடிகை ஜெயசுதா கையெழுத்திட்ட நன்றிக் கடிதமும் போட்டோவும் வந்தன. அவன் கல்லூரி விடுதி முழுவதும் எல்லோரிடமும் அந்தக் கடிதத்தையும் போட்டோவையும் காட்டிக்கொண்டு திரிந்தான். அவன் பிறவிப்பயனை அடைந்துவிட்டதாகத் தோன்றியது.

ஜெயசுதா

எழுபதுகளில் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களாகிய நாங்கள் வாரத்திற்குக் குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து திரைப்படங்கள் பார்த்தோம். திரைப்படம் ஏதோவொரு மாயக்கவர்ச்சியினால் எங்களை ஈர்த்தது. ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் பார்க்கிறவர்கள் நிறைய பேர் இருந்தனர். படிக்கிற பிள்ளைகளுக்குச் சினிமா எதுக்கு என்ற பெரிசுகளின் குரல் அவ்வப்போது கேட்டாலும், திரைப்படப் பிசாசின் கரங்களில் இருந்து தப்பிக்க இயலாத சூழல் நிலவியது.

நாவல், சிறுகதை வாசிப்பதில் தீவிரமாக இருந்த நான், எங்கள் கல்லூரிக்கு அருகில் இருந்த நாகமலை தியேட்டரில் 10.30 இரவுக் காட்சிக்குப் போவதிலும் ஆர்வத்துடன் இருந்தேன். கிராமத்துத் தியேட்டரில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை படத்தை மாற்றுவார்கள். அந்தத் திரைப்படம் ரிவால்வார் ரீட்டா, படகோட்டி, புதிய பறவை, கன்பைட் காஞ்சனா, பாசமலர், மாய மோதிரம், ராணி சம்யுக்தா, குறத்தி மகன், அவளுக்கென்று ஒரு மனம் என எதுவானாலும் இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து இரண்டாம் ஆட்டத்திற்குத் தியேட்டருக்குச் செல்லுவோம். ஏன் இப்படி எங்களுக்குத் திரைப்பட மோகம் பிடித்தது என்பது இன்றளவும் புலப்படவில்லை. நானும் எனது நண்பனும் ஒரே நாளில் மதியக் காட்சியில் மதுரை, சென்டிரல் தியேட்டரில் யட்ச கானம் என்ற மலையாளப் படம், மாலைக் காட்சியில் ரீகல் தியேட்டரில் ரெட் சன் என்ற ஆங்கிலப் படம், இரவுக் காட்சி மீனாட்சி தியேட்டரில் மேரா நாம் ஜோக்கர் இந்தித்திரைப்படம் (4.15 மணி நேரம்- 25 ரீல்கள்) பார்த்துவிட்டு, கல் லோடு அரைப்பாடி லாரியில் ஏறி ஹாஸ்டலுக்குப் போனோம். அப்பொழுது கீழ் வானம் சிவக்கத் தொடங்கியிருந்தது. வேப்ப மரத்தடியில் அமர்ந்து கதிரவன் தோன்றுவதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தோம். விடியலில் உதய சூரியன் பேரழகாக இருந்தது.

குறத்தி மகன்

மதுரைப் புறநகரில் நாகமலையில் இருந்த எங்கள் கல்லூரி விடுதியில் இருந்து பத்து மைல் தொலைவில் இருந்த செக்காணூரணி கிராமத்தில் வடிவேல் தியேட்டரில் இரவு 10-30 காட்சி பார்க்க ஒரு கோஷ்டி கும்பலாகக் கிளம்பிவிடும். திரைப்படம் முடிந்த பின்னர் கும்மிருட்டில் அரட்டையடித்துக்கொண்டு ஹாஸ்டலுக்கு நடந்து வருவோம். அந்தத் தியேட்டர் எங்கள் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்த ஜுனியர் மீனாட்சி சுந்தரத்தின் குடுபத்தினருக்குச் சொந்தமானது. ஒருநாள் இரவுக் காட்சி படம் பார்த்துவிட்டு தியேட்டர் மேலாளராக இருந்த மீனாட்சி சுந்தரத்தின் அண்ணனிடம் சொல்லிவிட்டு எல்லோரும் நீள பெஞ்சில் படுத்துத் தூங்கினோம். பொழுது விடிந்தவுடன் பேருந்தில் ஏறி கல்லூரி விடுதிக்கு வந்தோம். இரவு பகலாகத் தியேட்டரில் பொழுதைப் போக்கிய செயல்களை இப்பொழுது நினைக்கும்போது நாணமாக இருக்கிறது.

எழுபதுகளின் இறுதியில் ’16 வயதினிலே’, ‘உதிரிப்பூக்கள்’, அவள் அப்படித்தான்’ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ’ ஒரு தலை ராகம்’ போன்ற படங்கள் வெளியானபோது, நானும் என் நண்பர்களும் முதல் நாளிலே திரையரங்குக்குச் சென்று படம் பார்த்திருக்கிறோம். வித்தியாசமான திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரைப்படத்துறை மாறிவிடும் என்று பாமரத்தனமாக நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம். மதுரையில் `கல்பனா’ திரையரங்கில் ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் முதல் காட்சிக்குத் தனியாகப் போயிருந்தேன். ஜெயகாந்தன் சிறுகதைகள், நாவல்களை வாசித்து அவருடைய எழுத்தின்மீது எனக்குப் பெரிதும் ஈடுபாடு. அக்கினிப்பிரவேசம் சிறுகதையும் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலும் எனக்குள் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. கறுப்பு வெள்ளையில் பேச்சு, சாப்பாடு என்று திரையில் விரிந்த காட்சிகளினால் பொறுமையிழந்த ரசிகர் கூட்டம் ‘ஹோ’ வெனக் கத்தி, பெஞ்சுகளைத் தூக்கிப் போட்டது. பார்வையாளர்களுக்குக் கதையும் கதை சொன்ன முறையும் புரியவில்லை. ‘காதல் இளவரசன் திருமுருக கிருபானந்த வாரியாருக்கு…’ என யாரோ கத்த, கும்பல் ‘ஜே’ போட்டது. அப்புறம் ‘கனவுக்கன்னி கே.பி.சுந்தரம்பாளுக்கு…..” எனக் கத்திட, ‘ஜே’ திரையரங்கம் முழுக்க ஒலித்தது. சிலர் எழுந்துபோய் வாயிலில் தொங்கிய திரைச்சீலைகளை ஒதுக்கித் தள்ளிவிட திரையில் படம் எதுவும் தெரியவில்லை. ஒருவழியாகப் படம் முடிந்து வெளியே வரும்போது, எனக்கு அருகில் நடந்து வந்த இளைஞர்கள், அடுத்த காட்சிக்காக வரிசையில் காத்திருப்பவர்களின் காலைத் தொட்டுக் கும்பிட்டு ‘படத்துக்குப் போகாதீங்க… கொத்து புரோட்டா போட்டுட்டானுக’ என்றனர்.

சிலநேரங்களில் சில மனிதர்கள்

மதுரையிலுள்ள திரையரங்குகளில் பொதுவான அம்சம், படம் பிடிக்கவில்லை என்றால் ‘கட்டை’யைக் கொடுப்பது இயல்பாக நடக்கும். படம் மெலோடிராமாவாக – இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்போல – மெல்ல நகரும்போது, திடீரென ஒரு குரல் கேட்கும், `பருத்திப்பால்’ என்று. எங்கும் சிரிப்பொலி படரும். அப்புறம் ‘கட்டிலு… கட்டிலு…’ என யாராவது கூச்சலிடுவார்கள். மீண்டும் சிரிப்பலை எங்கும். போர் அடிக்கிற திரைப்படக் காட்சியில் வித்தியாசமாக யாராவது திடீரென ‘கமெண்ட்’ அடிப்பது பெரும்பாலும் வரவேற்கக்கூடியதாகவே இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து அறுவைப் படத்தைத் தியேட்டரில் பார்க்கும்போது ராவல் தாங்காமல் கமெண்ட் அடித்திருக்கிறோம். மதுரை தியேட்டர்களில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எவ்வளவுதான் கமெண்ட் அடித்தாலும் பெரும்பாலானோர் ரசித்துச் சிரிக்கிற ஒலி எங்கும் பரவும்.

தமிழ்த் திரைப்படத்தில் சாதனையாளர்களாக விளங்கிய இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள், கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், தொகுப்பாளர்கள், பாடகர்கள், நடிகர் நடிகையர் பற்றித் தனியாக நூல் எழுதுமளவு விஷயங்கள் இருக்கின்றன. இந்த இடத்தில் சில எதிர்மறை விஷயங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியம். நல்ல திரைப்படம் எதுவென்ற புரிதல் இல்லாத காலகட்டத்தில் இளைஞர்களைக் கவர்ந்த /சீரழித்த போக்குகளைப் பற்றிச் சொல்லவேண்டும்.

ஜம்பு

கர்ணன் என்ற ஒளிப்பதிவாளர் தமிழுக்கு அறிமுகப்படுத்திய மெக்சிகோ நாட்டுக் கௌபாய் பின்புலத்திலான படங்கள் எழுபதுகள் தொடங்கி தமிழகத்தில் பிரபலமாக விளங்கின. அவர் இயக்கிய காலம் வெல்லும், கங்கா, ஜக்கம்மா போன்ற கறுப்பு வெள்ளைப் படங்கள் முதலாக எங்க பாட்டன் சொத்து, ஜம்பு போன்ற வண்ணப் படங்களுக்கெனத் தனியாக ரசிகர் கூட்டம் இருந்தது. பழி வாங்குகிற கதைப் பின்னலில் ஜெய்சங்கர் கதாநாயகனாகவும் அசோகன் வில்லனாகவும் கௌபாய் வேடத்தில் துப்பாக்கியை ஏந்திச் சுட்டவாறு குதிரைகளில் விரைந்த காட்சிகள் பிரபலமாக விளங்கின. கர்ணன் இயக்கிய ஜம்பு திரைப்படம் அலங்கார் தியேட்டரில் வெளியான நாளில் நண்பர்களுடன் இரண்டாம் ஆட்டம் பார்க்கப் போயிருந்தேன். படத்தில் நடிகைகள் ஒகேனக்கல் அருவியில் மெல்லிய துணியை உடுத்தி அடிக்கடி குளித்தனர். முக்கால் நிர்வாணமான பெண்ணுடலைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது. பாலைவனத்திலும் பனிக்கட்டியிலும் படம் பிடித்த கர்ணனைக் கேமரா மேதை என்று சிலர் நம்பினர். தமிழர் வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத கௌபாய் பண்பாட்டைத் தமிழ்ப் படமாக்கத்தில் கையாண்ட கர்ணன் வித்தியாசமானவர்தான். அவருடைய படங்களுக்கு மதுரை நகரில் ரசிகர்கள் அதிகம்.

எங்க பாட்டன் சொத்து

1981-ம் ஆண்டு மதுரைத் தெருச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் மீனாட்சி திரையரங்கில் ’ஒதுக்கப்பட்டவள்’ என்ற கறுப்பு வெள்ளைப் படம் திரையிடப்படுவதாக அறிவிப்பு இருந்தது. டைரக்‌ஷன்; கே.எஸ். கோபாலகிருஷ்ணன் என்று போட்டிருந்தது. மலையாளப் படம் பார்த்தால் மலையாள அறிவு விருத்தியாகும் என்று தியேட்டருக்குப் போனேன். கண் தெரியாத பாடகன், நாட்டியமாடும் பெண் அடங்கிய குழுவினர் தெருவில் ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி காசு சம்பாதிப்பதுதான் கதை. யதார்த்தமான கதை விவரிப்பில் படம் சோகமாக இருந்தது. பரவாயில்லை. எனக்கு ஓரளவு மலையாளம் புரிந்தது. திடீரெனப் படத்தின் நாயகியும் நாயகனும் நிர்வாணமாகப் புரண்டு முயங்கிட முயலுகிற காட்சி திரையில் ஒளிர்ந்தது. ஒருகணம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சராசரியான குடும்பப் படத்தில் எதற்கு இந்தக் காட்சி, எப்படி இடம் பெற்றது என்று யோசிப்பதற்குள் அந்தப் படுக்கையறைக் காட்சி முடிந்துவிட்டது. அதுதான் மதுரையில் திரையிடப்பட்ட முதல் பிட்டுப் படம் என நினைக்கிறேன்.

ஐ.வி.சசியின் ’அவளோட ராவுகள்’ மலையாளத் திரைப்படம் பாலியல் தொழிலைச் செய்கிற பெண்ணின் அவல வாழ்வைச் சித்திரித்தது. நல்ல கதையம்சம் கொண்ட படம். எனினும் அந்தப் படத்தின் நாயகி, மேலுடம்பில் சட்டையில்லாமல் குளித்த காட்சி, மதுரை சென்டிரல் தியேட்டரில் திரையிட்டப்பட்டபோது, இடம் பெற்றது. பொழுதுபோக்காகச் சினிமா பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை உசுப்பேற்றுவது போன்ற பாலியல் காட்சிகளை மலையாளப் படத்தில் இணைத்தவர்கள்தான், சூழலை நாசமாக்கியவர்கள். தொடக்கத்தில் பிட்டுப்படத் தொழில் மலையாளிகளால்தான் தமிழகத்திற்குள் நுழைந்தது என்று விநியோகஸ்தர் தொழில் செய்த என் நண்பர் சொன்னார்.

திரையரங்குகள்

அப்புறம் மலையாளப் படம் என்றால் பிட்டுதான் என்று சராசரியான மதுரைக்காரர்கள் நினைக்கிற அளவுக்குச் சூழல் மாறியது. ரசிகர்கள் சேர்ந்து பிட்டுப் படம் வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டதுபோல அது மாதிரியான படத்தைத் தயாரித்து, அதற்கான சந்தையை உருவாக்க்கியவர்களால் திரை ரசனையில் சீரழிவு ஏற்பட்டது.

பரமேஸ்வரி தியேட்டரில் பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள்தான் திரையிடப்பட்டன. கதையம்சத்துடன் கூடிய பழைய படங்களைப் பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் இருந்தனர். துப்பறியும் படம், திகில் படம் என்று திரையிடப்பட்ட தியேட்டரில் காலை 11 மணிக் காட்சியில் படத்திற்குத் தொடர்பு இல்லாமல் வெளிநாட்டுப் பெண் உடலில் துணி இல்லாமல் குளிக்கிற காட்சி காட்டப்பட்டது. ஆங்கிலத் திரைப்படத்தில் முத்தக் காட்சிகளும் டூ பீஸ் உடையணிந்து கடற்கரையில் திரிகிற வெளுத்த தோல் பெண்களும் ரசிகர்களுக்குக் கவர்ச்சியாகத் தோன்றவில்லை.

அப்புறம் பிட்டுப் பட நோய் சிம்மக்கல் ஒர்க் ஷாப் ரோட்டில் இருந்த தீபா, ரூபா; வில்லாபுரம் மது போன்ற தியேட்டர்களுக்கும் பரவியது. அந்தத் தியேட்டர்களில் ஆண்டுக்கணக்கில் பெண்கள் நுழையவில்லை. காவல் துறையினர் நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை தலையிட்டு படம் திரையிடப்படுவதை நிறுத்தி வழக்கு பதிவு செய்யும். சில நாள்கள் தியேட்டர் மூடப்பட்டிருக்கும். அப்புறம் ’மாமனாரின் இன்ப வெறி’ போன்ற போஸ்டருடன் தியேட்டர், பாலியல் சேவையை மீண்டும் தொடங்கும். மதுரைக்குப் புற நகர்ப் பகுதியில் இருந்த தியேட்டர், டூரிங் டாக்கீஸ்களும் பிட்டுப் படங்களைத் திரையிட்டன. அரை மணி நேரம் ஏதோவொரு படத்தைத் திரையிட்டுச் சிறிய இடைவேளைக்குப் பிறகு ஐந்து நிமிட பிட்டை ஓட்டி முடித்தவுடன், படம் நிறுத்தப்படும். படம் பார்க்க வந்த பார்வையாளர்கள் அமைதியாக தியேட்டரிலிருந்து வெளியேறுவார்கள். எல்லோருக்குள்ளும் ஒருவிதமான குற்றமனம் தோய்ந்திருக்கும். இந்தத் தியேட்டரின் நிரந்தர வாடிக்கையாளர்கள் பெரிதும் திருமணமான நடுத்தர வயது ஆண்கள்தான். இன்று பிட்டுப் படம் ஓட்டுகிற திரையரங்கம் எதுவுமில்லை. இன்று அலைபேசியில் கூகுள் தேடுபொறிக்குள் நுழைந்தால் மலைபோலக் குவிந்திருக்கிற போர்ன் படங்கள் பிட்டுப் படம் திரையிட்ட தியேட்டர்களை அர்த்தமிழக்கச் செய்துவிட்டன. போன தலைமுறையினர் நீலப்படக் காட்சிக்காக அலைந்த அலைச்சல் இன்றைக்கு வேடிக்கையாகத் தோன்றுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.