உத்தரப் பிரதேச போலீஸார் புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளனர். யாரையாவது கைது செய்ய வேண்டும் என்றால், அவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள் என்றால் அவர்களது வீட்டின் ஒரு பகுதியை இடித்து விட்டு சரணடைந்தால் மீத வீடும் தப்பும் என்று எச்சரிக்கிறார்கள். பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த புல்டோசர் அரசியலை தற்போது மத்தியப் பிரதேசமும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.. இதோ இப்போது டெல்லிக்கும் அது வந்து விட்டது.
உத்தரப் பிரதேசத்தில் புதிய வகை அரசியலை கையில் எடுத்துள்ளது யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு. அங்கு குற்றவாளிகள், தலைமறைவாக இருப்போர், சமூக விரோதிகள் மற்றும் பிறரைக் கைது செய்ய “புல்டோசர்” அரசியலை அந்த மாநில காவல்துறை பயன்படுத்துகிறது. அதாவது யாரைக் கைது செய்ய நினைக்கிறார்களோ அவர்களைக் கைது செய்ய அவர்களது வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பதுதான் இந்தப் புதிய டெக்னிக்.
உத்தரப் பிரதேச கூடுதல் டிஜிபி பிரஷாந்த் குமார் இதுகுறித்துக் கூறுகையில், யோகி ஆதித்யநாத் அரசு மீண்டும் பதவியேற்ற 2 வாரங்களிலேயே 50க்கும் மேற்பட்ட கிரிமினல்கள், வீட்டை இடித்து விடுவார்களோ என்ற பயத்தில் சரணடைந்துள்ளனர். பிரதாப்கர் மாவட்டத்தில்தான் இந்த புல்டோசர் டெக்னிக் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. அங்குள்ள குற்றவாளியின் வீட்டுக்கு அருகே புல்டோசரை நிறுத்தியதைத் தொடர்ந்து அவர் அடுத்த நாளே சரணடைந்து விட்டார்.
அதேபோல சஹரன்பூரில் அமிர், ஆசிப் ஆகிய இருவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு வீட்டின் பாதியை இடித்து விட்டனர். உடனடியாக சரணடைந்தால் மீதமுள்ள வீடு தப்பும் என்று எச்சரித்தனர். இதையடுத்து ஆசிப்பும், அமிரும் சரணடைந்து விட்டனர். தண்டா காவல் நிலையப் பகுதியில் ஒரு கொலைக் குற்றவாளியின் வீடும் இதேபோல இடிக்கப்பட்டது என்றார் அவர்.
உ.பி. போலீஸார் கோர்ட், வழக்கு போன்றவற்றை விட்டு விட்டு இப்போது வீடுகளை இடிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். ஆனால் இந்த வீடு இடிக்கும் வேலையெல்லாம் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புல்டோசர் அரசியலை மத்தியப் பிரதேச அரசும் தற்போது பின்பற்றத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ராமநவமி சமயத்தில் பெரும் வன்முறை மூண்டது. முஸ்லீம்களைக் குறி வைத்து பெரும் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் 50க்கும் மேற்பட்ட முஸ்லீம்களின் வீடுகள் தீவைத்து எரித்து நாசமாக்கப்பட்டன. மேலும் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் சிவராஜ் செளகான் தலைமையிலான அரசு, முஸ்லீம்களின் வீடுகளை இடிக்க புல்டோசர்களைப் பயன்படுத்தியது. முஸ்லீம்களுக்குச் சொந்தமான 16 வீடுகள், 29 கடைகள் புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
என்ன கொடுமை என்றால் இதில் பெரும்பாலான வீடுகள் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவையாகும். இந்த வீடுகளைக் கட்ட நிதியுதவி அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி கூறி அந்த வீடுகளின் சுவர்களிலும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த வீடுகளையும் கூட அரசு இடித்துத் தரைமட்டமாக்கியது. இப்படி
பாஜக
அரசு புல்டோசரை வைத்து வீடுகளை இடிக்கும் செயல் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த புல்டோசர் அரசியலை டெல்லிக்கும் கொண்டு வந்து விட்டது பாஜக. அதாவது டெல்லி மாநகராட்சியைக் கையில் வைத்துள்ள பாஜக டெல்லி ஜஹாங்கீர்பூரில் உள்ள முஸ்லீம்களின் வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை இடிக்க உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி இவற்றை இடித்து வருகின்றனர்.
ஜஹாங்கீர்பூர் பகுதியில் அனுமன் ஜெயந்தி சமயத்தில் கலவரம் வெடித்தது. அதில் தங்களைக் குறி வைத்துத் தாக்கியவர்களுக்கு எதிராக முஸ்லீம்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இவர்களது வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்க பாஜக தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம் தற்போது களம் இறங்கியுள்ளது. இந்த “ஆக்கிரமிப்பு” அகற்றும் பணியை உடனடியாக நிறுத்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் கூட மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பை நிறுத்தவில்லை. ஆர்டர் கையில் வரும் வரை இடிப்போம் என்று கூறி பிடிவாதமாக இடித்துக் கொண்டுள்ளனர்.
அனுமன் ஜெயந்தி சமயத்தில் நடந்த சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் வகையில் இந்த கட்டட இடிப்பு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மிகப் பெரிய அளவில் போலீஸ் பாதுகாப்பை போட்டு இந்த கட்டட இடிப்பை அதிகாரிகள் மேற்கொண்டனர். டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது நினைவிருக்கலாம்.
இது வழக்கமான ஆக்கிரமிப்பு அகற்றம்தான் என்று
டெல்லி மாநகராட்சி
அதிகாரிகள் விளக்கம் கொடுத்தாலும் கூட, டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா மாநகராட்சிக்கு கடிதம் எழுதி குறிப்பிட்ட வீடுகளை இடிக்குமாறு கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் உலா வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்
புல்டோசர் அரசியல்
டெல்லிக்குள்ளும் புகுந்திருப்பதாக தற்போது பரபரப்பு கிளம்பியுள்ளது. கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.