றம்புக்கணை ஆர்ப்பாட்டக்காரர் மத்தியில் 30,000 லீற்றர் எரிபொருளுடனான பவுசர் ஒன்றை தீயிடுவதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சியை தடுப்பதற்கும் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தை தடுப்பதற்கும் பொலிசார் ஆகக்குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
றம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று இந்த விடயங்களை பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,றம்புக்கணை ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் தங்களது அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக நேற்று காலை றம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகையை பயன்படுத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களினால் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.