லண்டன்: கடந்த வருடம் கரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறையை மீறி சகாக்களுடன் கேக் வெட்டியதற்காக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சஸ் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரிட்டனில் கரோனா லாக்டவுன் அமலில் இருந்தபோது, விதிமுறைகளை மீறி அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், சான்சலர் ரிஷி சுனாக் ஆகியோர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடியது, அந்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கரோனா விதிமுறையை மீறியதால் அந்நாட்டு காவல்துறை இருவருக்கும் அபராதம் விதித்து உத்தரவிட்டது. விதிமீறிலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து அந்நாட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் போரிஸ் ஜான்சனை கடுமையாக விமர்சித்து வந்தனர். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அபராதம் விதிக்கப்பட்டதற்குப் பின்னர் முதன்முறையாக போரிஸ் ஜான்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசினார்.
அப்போது அவர் “பிரிட்டனில் லாக்டவுன் அமலில் இருந்தபோது எனது அலுவலக சகாக்களுடன் நான் பிறந்தநாளை கொண்டாடியபோது அதிலிருந்த தவறை உணரவில்லை. இப்போது அந்த தவறை உணர்கிறேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன். பிரதமரிடமிருந்து இன்னும் அதிகமான நன்மையை எதிர்பார்க்க பிரிட்டன் மக்களுக்கு உரிமையுண்டு. இனி பணியில் முன்னேறிச் செல்வோம். உக்ரைன் மீதான ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் கவனம் செலுத்துவோம்” என்று பேசியுள்ளார்.
போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டாலும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க் கட்சிகள் பதிவு செய்து வருகின்றன. இது தொடர்பாக முன்னரே போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர விரும்பிய பிரிட்டன் எதிர்க்கட்சிகள் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டன. ஆனால், அதற்குள் உக்ரைன் போர் வந்ததால் நிலைமை மாறியது. இந்த நிலையில், இப்போது மீண்டும் தங்களது கோரிக்கைகளுக்கு உயிர் கொடுத்து வருகிறது பிரிட்டன் எதிர்க்கட்சி.