கோடை விடுமுறையையொட்டி திருமலைக்கு வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
கோடை காலத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறையையொட்டி திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
வைகுண்டம் காத்திருப்பு அறைகள், பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் சென்றவுடன் உடனுக்குடன் சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர், உணவு, பால், சிற்றுண்டி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களின் சேவையில் ஸ்ரீவாரி சேவார்த்திகள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வருகை அதிகம் இருப்பதால் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் வி.ஜ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தலை முடி காணிக்கை செலுத்தும் பகுதியிலும் அதிக அளவில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட நேர இடைவெளியில் கல்யாண கட்டா பகுதியை சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமலை அன்னதான கூடத்திலும் நள்ளிரவு 12 மணி வரை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகைக்கு தக்கவாறு லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 67,858 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,536 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.