விசா வழங்கல் படிப்படியாக அதிகரிக்கப்படும்: அமெரிக்க தூதரகம் தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. இதனால், மீண்டும் சர்வதேசப் பயணங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அமெரிக்காவில் வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அங்கீகாரம் பெற்றவர்களுக்கு தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. அங்கு வாழும் இந்தியர்கள் பலரது விசாக்கள் காலாவதியாகிவிட்டதால் அவர்கள் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளனர். விசா காலாவதியானதால், அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறலாம் ஆனால் மீண்டும் நுழைய முடியாது.

அதேசமயம், இந்தியாவுக்கு மீண்டும் வந்து இங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் நேர்காணலுக்கு சென்று அவர்களால் விசாக்களை புதுப்பிக்க முடியவில்லை. நேர்காணலுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. நம்பமுடியாத அளவிற்கு சுமார் 8 மாதங்கள் வரை அப்பாயின்மெண்ட்டுகளுக்கான ஸ்லாட்டுகளுக்கு காத்திருக்க வேண்டியிருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில், அமெரிக்க தூதரகம் சார்பில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தூதரக விவகாரங்களுக்காக ஆலோசகர்
டொனால்ட் ஹெஃப்லின்
செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இந்த தாமதம் பற்றி சமயம் தமிழ் சார்பில் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “டிராப் பாக்ஸ் வசதி முன்பு சிலருக்கு மட்டுமே வழங்கப்படது. தற்போது எல்லாருக்கும் வழங்கப்படுகிறது. ஒரு முறை
அமெரிக்கா
சென்று வந்த நபர்களின் கை ரேகை மற்றும் புகைப்படம் தூதரகத்திடம் ஏற்கெனவே இருக்கும். மீண்டும் விசா புதுப்பிக்க டிராப் பாக்ஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். அவசர தேவைக்காக அமெரிக்க செல்ல விரும்புவோருக்கு சிறப்பு அனுமதிகள் வழங்கப்படுகின்றன.” என்றார்.

எச் மற்றும் எல் விசா வகைகளுக்கு இந்தியா முழுவதும் விசா நேர்காணல் மற்றும் டிராப் பாக்ஸ் (நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகள்) ஸ்லாட்டுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் முறையாக விண்ணப்பிக்கும் பி1மற்றும் பி2 விசிட்டர் விசாவுக்கான நேர்காணல் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 10 நாட்களுக்கு முன்பு விசா நேர்காணல்கள் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், “ஜூன் நடுப்பகுதி அல்லது ஜூலை நடுப்பகுதியில் இருந்து பெரும்பாலான பிரிவுகளுக்கு ஸ்லாட்டுகள் கிடைக்கும் என்றார். எவ்வாறாயினும், நேர்காணல் அல்லாத எச் மற்றும் எல் விசாக்களுக்கான ஸ்லாட்டுகளுக்கு ஏற்கனவே அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால் அதற்கான ஸ்லாட்டுகள் தற்போது இல்லை. இந்த பிரிவில் உள்ள நபர்கள் செப்டம்பர் 1 முதலான ஸ்லாட்டுகளுக்கு அடுத்த சில வாரங்களில் அப்பாயின்ட்மெண்ட்டுகளை பதிவு செய்ய முடியும்.” என்றார்.

இதேபோல், பி1 மற்றும் பி2 பிரிவில் முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு, செப்டம்பர் 1 முதல் ஒரு நாளைக்கு 500 அப்பாயின்ட்மென்ட்கள் கிடைக்கும். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அடுத்த சில வாரங்களில் அப்பாயின்ட்மென்ட்களை பதிவு செய்ய முடியும் என்றும் டொனால்ட் ஹெஃப்லின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனாவுக்கு முன்பு 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டன. அடுத்த 12 மாதங்களில் 8 லட்சம் விசாக்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்களுக்கு மே இரண்டாவது வாரத்தில் விசா நேர்காணலுக்கான தேதி ஒதுக்க தொடங்கப்படும். கடந்த ஆண்டு மாணவர்களுக்கு 62,000 விசாக்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு அதனை விட அதிகமாக வழங்க திட்டமிட்டுள்ளோம்.” என்றார். இதேபோல், அடுத்த 12 மாதங்களில் மூன்று லட்சம் ‘எச்’ மற்றும் ‘எல்’ வகை விசாக்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இது தேவையை போதுமான அளவு பூர்த்தி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை விசா மறுக்கப்பட்ட அல்லது இந்த ஆண்டு வசந்த காலத்தில் நிராகரிக்கப்பட்ட மற்றும் கோடையில் மீண்டும் விண்ணப்பிக்கத் திட்டமிட்டிருந்த
மாணவர்கள்
, இந்த ஆண்டு மீண்டும் நேர்காணலுக்கான ஸ்லாட்டுகளை பெற வாய்ப்பில்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.