டெல் அவிவ்: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் இறுதியில் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் உருவாகியது. இந்த நிலையில் திங்கட்கிழமை ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம், “காசா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ராக்கெட் வீசப்பட்டது. எனினும் அதனை நாங்கள் இடைமறித்து அழித்தோம்” என்று தெரிவித்தது. இஸ்ரேல் -பாலஸ்தீன மோதல் குறித்து செவ்வாய்க்கிழமை நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸின் தாக்குதலுக்கு எதிர்வினையாக இஸ்ரேல், காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மார்ச் 1-ஆம் தேதி, முகமது நபிகள் விண்ணேற்றத்தைக் குறிக்கும் நாளன்று, கிழக்கு ஜெருசலேமில் டமாஸ்கட் கேட் பகுதியில், பாலஸ்தீனர்கள் கூடி இருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், பாலஸ்தீனர்களை கலைக்க தீவிரமாக இறங்கினர். தண்ணீரைப் பீய்ச்சியும், ஸ்டன் கையெறி குண்டுகளையும் வீசியும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதிலும் பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காசா பகுதியில் மோதல் அதிகரித்து வருகிறது.
வன்முறைகளை கைவிடுங்கள்: இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவும் சூழலில் வன்முறைகளைக் கைவிடுமாறு இருநாடுகளுக்கும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் இதுதொடர்பாக பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், இஸ்ரேலி வெளியுறவு அமைச்சர் யார் லாபிட் ஆகிய இருவரிடமும் தனித்தனியே தொலைபேசியில் பேசியுள்ளார்.
அந்த உரையாடலின் போது “மேற்குக் கரை, காசா பகுதிகளில் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் வன்முறையைக் கைவிட வேண்டும். அடிக்கடி நடக்கும் சிறுசிறு மோதல்களை தவிர்க்க வேண்டும். இருதரப்புமே கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று ஆண்டனி பிளின்கன் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.