திருநீறும் குங்குமமும் பக்தர்களின் அடையாளம். ஆலயங்களுக்குச் செல்லும்போது அங்கு நாம் பெற்றிக்கொள்ள விரும்பும் பிரசாதங்கள் இவைதான். திருநீறு என்பதற்கு ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் உண்டு. குங்குமமோ அம்பிகையின் அருட்பிரசாதம். மகாலட்சுமி சுமங்கலிப்பெண்கள் அணியும் குங்குமத்தில் வசிப்பவள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மகிமை நிறைந்த குங்குமம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பது பலரும் அறியாத விஷயம்.
அண்மையில் தமிழ்நாடு அரசு பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்குமம் பிரசாதம் ஆகியவற்றைத் தயாரிக்கும் மையங்களை எட்டு ஆலயங்களில் தொடங்கியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆகிய நான்கு கோயில்களில் திருநீறும், திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் ஆலயம், பண்ணாரி மாரியம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில் குங்குமமும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் குங்குமம் மற்றும் திருநீறு பிற கோயில்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஏப்ரல் 10-ம் தேதி, குங்குமம் தயாரிக்கும் நவீன இயந்திரங்களால் ஆன தயாரிப்பு மையம் ஒன்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் பி.சந்தரமோகன், ஆணையாளர் குமரகுருபரன், உயர்மட்டக் குழு உறுப்பினர் தேசமங்கையர்க்கரசி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையாளர் இலட்சுமண் மற்றும் இணை ஆணையாளர்கள் ஜெயராமன், பரஞ்ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவேற்காட்டில் அமைந்திருக்கும் கருமாரி அம்மன் கோயிலில் குங்குமம் தயாரிப்பு மையம் எப்படி இயங்குகிறது? அங்கு குங்குமம் எப்படித் தயார் செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அங்கே சென்றோம்.
திருக்கோயில் வளாகத்துக்குள்ளாகவே குங்குமம் தயாரிக்கும் கூடம் அமைந்துள்ளது. அந்தக் கூடத்தை நெருங்குவதற்கு முன்பாகவே குங்குமத்தின் தெய்வீக நறுமணம் நம் நாசியை வருடியது. அந்தக் கூடத்தில் மகேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார், அவரிடம் குங்குமம் தயாரிப்பது குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறோம் என்பதைச் சொன்னோம். தன் பணிகளுக்கு இடையே சிறிது ஓரம் ஒதுக்கி செய்முறையை விளக்கினார்.
குங்குமத்தின் மூலப்பொருள்களில் முக்கியமானது விரலி மஞ்சள். தேவைப்படுபவர்கள் கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சளின் எடைக்கு எடை எலுமிச்சை எடுத்து சாறு பிழிய வேண்டும். அந்தச் சாற்றில் வெங்காரம் படிகாரம் முதலியவற்றைச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையில் மஞ்சளை மூன்று நாள்கள் ஊறவைக்க வேண்டும். தினமும் அந்தக் கலவையை நன்கு கிளறி விடவேண்டும். பின்பு மஞ்சளை நன்கு உலர்த்தி விட வேண்டும். குறைந்தது நான்கு நாள்கள் அதைக் காயவைத்து அதன் ஈரத்தன்மை போகும்படிச் செய்ய வேண்டும்.
அவ்வாறு காயவைத்த மஞ்சளை உடைத்துப் பார்த்தால் அது சிவப்பு நிறமாகக் காட்சி கொடுக்கும். அந்த நிலையில் அதை நைஸாக அரைத்து ஜலித்துக் கொள்ள வேண்டும். இதில் குறிப்பிட்ட அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்தால் மிருதுவான வாசனை மிகுந்த குங்குமம் தயாராகிவிடும்.
திருவேற்காடு தலத்தில் தற்போது இதற்கென நவீன இயந்திரங்களைப் பொறுத்தியிருக்கிறார்கள். எலுமிச்சையை சாறு பிழிய, கலவையில் ஊறவைத்த மஞ்சளை அரைக்க மீண்டும். அதை நன்கு நைஸாக அரைக்க, ஜலிக்க அத்தோடு நல்லெண்ணெய் சேர்க்க என ஐந்து முக்கிய இயந்திரங்கள் உள்ளன. அதன் மூலம் தூய்மையான இயற்கையான மஞ்சளின் வாசனை நிறைந்த குங்குமம் தயாரிக்கப்படுகிறது. பிறகோயில்களுக்கான ஆர்டர்களும் இங்கு வந்த வண்ணம் இருக்கின்றன. எனவே தொடர்ந்து அங்கே குங்குமம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் கோயிலின் இணை ஆணையர் லட்சுமணனிடம் பேசினோம்.
“மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிவித்தபடி ஏப்ரல் 10 ம் தேதி இந்த மையம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பால்வலத்துறை அமைச்சரும் கலந்துகொண்டார். இந்தத் திட்டத்தின்படி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான சுகாதாரமான குங்குமம் வழங்குவதோடு திருக்கோயிலைச் சுற்றி இருக்கும் பிற கோயில்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.
குங்குமம் தயாரிப்பதற்கான மூலப்பொருளான மஞ்சளை உலகப் புகழ்பெற்ற ஈரோடு சந்தையில் இருந்து கொள்முதல் செய்கிறோம். ஒரு நாளைக்கு இங்கு நூறு முதல் இருநூறு கிலோவரை உற்பத்தி செய்ய இயலும். வரும் காலத்தில் பக்கத்து மாவட்டத் திருக்கோயில்களுக்கும் குங்குமம் அனுப்பி வைக்க உள்ளோம். மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தி அனைத்து பக்தர்களுக்கும் தூய்மையான குங்குமம் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
அந்த யூனிட்டை சுற்றி வந்தபிறகும் நீண்ட நேரம் குங்கும வாசனை நம்முள் நிறைந்திருந்தது. அந்த நறுமணத்தோடு அன்னை கருமாரியை வழிபட்டு விடைபெற்றோம்.