அதிகமாக சம்பளம் கேட்கும் நடிகர்கள், கலைஞர்கள் தங்களுக்கு வேண்டாம் என பெப்சி அமைப்பின் தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். இதன்மூலம் `நடிகர்களின் மாய பின்பத்தை உடைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை இயக்குனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 10 பேருக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த சங்கங்களின் உறுப்பினர்களுக்கு இந்த 10 படங்களில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, உதயகுமார், பேரரசு மற்றும் தயாரிப்பாளர்கள் சரவண பிரசாத், தேனாண்டாள் முரளி, ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “சினிமா ஆரம்பத்தில் கலைஞர்களின் கையில் இருந்தது. பிறகு வியாபாரிகள் கைகளுக்கு சென்றது. தற்போது கலைஞர்களிடம் கைகட்டி நிற்கும் நிலையில் இருக்கிறது. அந்த நிலையை மாற்றி மீண்டும் கலைஞர்கள் கையில் சினிமாவை நாம் கொண்டுவர வேண்டும். அதற்கு இந்த புதிய முயற்சி உதவும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
“இயக்குனர் சங்க உறுப்பினர்கள் இயக்கவுள்ள இந்த 10 திரைப்படங்களுக்கு கதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த படங்களை இயக்கும் அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக படத்தின் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை மட்டுமே நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு சம்பளமாக வழங்க வேண்டும் – மீதமுள்ள 60 சதவீதத் தொகையை படத்திற்காக செலவிட வேண்டும் என நிபந்தனை உள்ளது. அதேபோல் அதிக சம்பளம் கேட்கும் நடிகர்களும், கலைஞர்களும் எங்களுக்குத் தேவையில்லை.
அதேபோல் தமிழ் நடிகர்களை வெளிமாநிலங்களில் உள்ள 50 சதவீதம் பேருக்கு மட்டுமே தெரியும். அதுவே இந்தியாவிற்கு வெளியில் அவர்களை யாருக்கும் தெரியாது. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நடிகர் யார், இயக்குனர் யார் என்பது தேவையில்லை. அவர்களுக்குத் தேவை கதை! அதை சரியாக செய்ய வேண்டும். அதை நாம் செய்வோம்” என புதிய இயக்குனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து பேசுகையில், “கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் ஒருவரே செய்வது ஒரு நோய். அதை மாற்ற வேண்டும். இயக்குநர் என்பவர் அனைத்தையும் ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும். அப்போதே சிறந்த படைப்பு வரும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் 10 திரைப்படங்கள் உருவாக காரணமாக இருந்த இயக்குனர் பிரவீன் காந்த் பேசுகையில், “நடிகர்களுக்காகதான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள் என்பது பொய். அந்த மாயையை மற்ற மாநில கலைஞர்கள் உடைத்துவிட்டனர். கதை இருந்தால் மட்டுமே ஒரு திரைப்படம் வெற்றியடையும். எனவே, சிறந்த திரைப்படத்தை உருவாக்க அனைவரும் யோசிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதன்பின் பேசிய இயக்குநர் பேரரசு, “தமிழ் சினிமா சமீபகாலமாக பின்னடைவை சந்தித்து விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அனுபவமில்லாத இயக்குனர்கள் வைத்து படம் எடுத்தால் இந்த நிலைமைதான் வரும். இரண்டு மூன்று படங்கள் எடுத்தால் உடனே பெரிய இயக்குனர்கள் என தூக்கி கொண்டாடப்படுகிறார்கள். யாராக இருந்தாலும் நடிகர்களுக்கு முக்கியத்துவம் என்பதை தாண்டி, கதையில் கவனம் செலுத்தி நேர்த்தியான படங்கள் கொடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
`தமிழ் சினிமா பின்னடைவை சந்தித்து விட்டது. அதற்கு காரணம் நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதுதான்’ என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது இயக்குனர்கள் கதையின் முக்கியத்துவத்தை பற்றி பேசத் தொடங்கியுள்ளது ஆரோக்கியமான விஷயமென பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
– செந்தில்ராஜா
சமீபத்திய செய்தி: ரஷ்ய பகுதிகள் ‘ப்ளர்’ செய்யப்பட்டதா? – கூகுள் மேப் விளக்கம்