அதிகரிக்கும் கொரோனா: மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!

நாடு முழுவதும்
கொரோனா
தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என்று அண்மையில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதேசமயம், தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் கொரோனா தொற்றின் நான்காவது அலை வீசக் கூடும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கட்டாயமாக
முகக்கவசம்
அணிய வேண்டும் என்று
டெல்லி
அரசு உத்தரவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கவும் டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. கொரோனா பரவல் குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பள்ளிகளை மூட வேண்டாம் என்றும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நிலையான செயல்பாட்டு நடைமுறையை கொண்டு வரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், தேசிய தலைநகரில் சோதனையை அதிகரிக்கவும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று மட்டும் கொரோனா புதிய பாதிப்புகள் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி 632 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேர்மறை விகிதம் 4.42 சதவீதமாக உள்ளதாகவும் டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை கொரோனா பாதிப்பு 501ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை இல்லை. ஆனால், நேர்மறை விகிதம் 7.72ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.