Electric Scooter Fire: தெலங்கானாவில் மறுபடியும் தீப்பிடித்த ப்யூர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

தூங்கி எழுந்தால் இப்போதெல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிவதுதான் தலைப்புச் செய்தியாக இருப்பது, மிகவும் வருத்தமான விஷயம். தினமும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீக்கிரையாகி, சோஷியல் மீடியாக்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் தெலங்கானாவில் உள்ள வாராங்கல் எனும் இடத்தில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த முறை எரிந்தது – ப்யூர் எனும் நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னையில் இதே ப்யூர் ஸ்கூட்டர் எரிந்து போனது நினைவிருக்கும். போன ஆண்டு செப்டம்பரில் ஹைதராபாத்தில் 2 ப்யூர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து போயின. ப்யூர் EV-யைப் பொருத்தவரை மட்டும் வாராங்கல் நிகழ்வு, நான்காவது சம்பவம்.

ப்யூர் நிறுவனம், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மொபிலிட்டி ஸ்டார்ட்–அப் கம்பெனி. Power Using Renewable Energy என்பதுதான் PURE–ன் விளக்கம். நீண்ட நாட்கள் உழைக்கும் ஹை பெர்ஃபாமன்ஸ் லித்தியன் அயன் பேட்டரிகளைத்தான் தனது வாகனங்களுக்குப் பயன்படுத்தி வருவதாகச் சொல்கிறது ப்யூர். இந்த நிறுவனத்தில் இருந்து மொத்தம் 3 மாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ETrance Neo, EPluto 7G, Etrysty 350 எனும் 3 மாடல்களில், இ–ப்ளூட்டோதான் கொஞ்சம் காஸ்ட்லியான ப்ரீமியம் ஸ்கூட்டர். இது 0–40 கிமீ–யை வெறும் 5 விநாடிகளில் கடக்கும் ஹை டார்க் மோட்டார் கொண்டது. டச் ஸ்க்ரீன், திருட்டைத் தடுக்கும் ஆன்ட்டி தெஃப்ட் அலார்ம், அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட்கள் என்று பல ப்ரீமியம் வசதிகள் கொண்ட ஸ்கூட்டர். இந்த இ–ப்ளூட்டோ 7G மாடலில்தான் கொஞ்சம் தரம் வாய்ந்த 60V 2.5kWh பவர் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியைப் பயன்படுத்துகிறது ப்யூர். இதில் எக்ஸ்டெர்னல் சார்ஜிங் பாயின்ட் உண்டு. அதாவது, ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சீட்டைத் திறக்காமலே சார்ஜ் போட்டுக் கொள்ளும் வசதி.

வாராங்கல்லில் ஒரு பரபரப்பான சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை மண்டலமாகக் கிளம்ப… ஏரியாவே பரபரப்பானது. நல்லவேளையாக, இதில் யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை என்பது நிம்மதி. அது, ப்யூர் இ–ப்ளூட்டோ 7G சிவப்பு நிற ஸ்கூட்டர். சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அந்த வீடியோ க்ளிப். ஸ்கூட்டர் எரியும்போது, லித்தியம் அயன் பேட்டரி செல்கள் ‘டப் டப்’ என வெடிக்கும் அந்த ‘பாப்’ சத்தம் நன்றாகவே கேட்டதாகச் சொல்கிறார்கள், அதை நேரில் பார்த்தவர்கள். அப்படியென்றால், நிச்சயம் இது பேட்டரி பிரச்னையாகத்தான் இருக்கும் என்று கண்கூடாகத் தெரிகிறது.

ஓலா, ஒக்கினாவா, ப்யூர், ஜிதேந்திரா EV என்று எல்லா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுமே பீதியைக் கிளப்பிவிட்டிருக்கின்றன. வேலூர் தந்தை/மகள் பலியான சம்பவத்துக்கு முன்பு டிசம்பர் மாதம் 2021–ல் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது HCD எனும் கார்கோ ஸ்கூட்டரை சார்ஜ் செய்து தூங்கி விட, புகை மூட்டத்தில் உயிர் பலியானதும் சோகம். ஸ்கூட்டர்கள் எரிவதும் கஷ்டம்தான். ஆனால், அதைத் தாண்டி உயிர்ப்பலி நிகழாமலாவது தடுக்க வேண்டும். மக்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மேல் இருக்கும் பயம் போகும் நாள் வர வேண்டும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.