நாட்டில் ஏற்படும் கலவரங்களை கட்டுப்படுத்த வேண்டுமானால் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டையும் புல்டோசர் வைத்து தரைமட்டமாக்கினால் போதும் என்று
ஆம் ஆத்மி
கட்சி எம்.பி ராகவ் சத்தா கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்துவதும், மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுமே பாஜகவின் முக்கிய அஜென்டாவாக உள்ளதாகவும் ராகவ் சத்தா ஆவேசமாக கூறியுள்ளார். இதையெல்லாம் தடுக்க, நாட்டில் அமைதியை கொண்டு வரச் செய்ய பாஜக அலுவலகத்தையும், அமித் ஷா வீட்டையும் இடித்துத் தரைமட்டமாக்குவதுதான் ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி
ஜஹாங்கீர்பூரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு வீடு, கடைகளை இடித்து வருகிறது டெல்லி மாநகராட்சி. இதற்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியுள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து இடிக்கும் பணியை டெல்லி மாநகராட்சி நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து ராகவ் சத்தா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், நாடு முழுவதும் பாஜகவினர்தான் கலவரங்களையும், வன்முறைகளையும் திட்டமிட்டு கட்டவிழ்த்து வருகின்றனர். இப்போது புல்டோசர்கள் மூலம் பேச ஆரம்பித்துள்ளனர். நாமும் பதிலுக்கு புல்டோசர்களை கையில் எடுக்க வேண்டும். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தைும், அமித் ஷா வீட்டையும் இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும். அப்போதுதான் வன்முறைகளும், கலவரங்களும் ஓயும். டெல்லி கட்டட இடிப்பை தடுக்க இதுதான் ஒரே வழி.
டெல்லியில் அமித் ஷாதான் கலவரத்தை ஏற்படுத்தி வருகிறார். திட்டமிட்டு செய்கிறார்கள். 2020ல் வட கிழக்கு டெல்லியில் கலவரத்தை ஏற்படுத்தினர். இன்று ஜஹாங்கீர்பூரி பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். பாஜகதான் இந்த கலவரங்களுக்கு பின்னால் உள்ளது. உள்துறை அமைச்சரே இதன் பின்னணியில் உள்ளார். கலவரத்தை தடுக்க அவரது வீட்டையும் புல்டோசர் வைத்து இடித்தால்தான் உண்டு.
இந்த கலவரங்களுக்கு பின்னணியில் பெரும் சதி வேலையே அடங்கியுள்ளது. ரோஹிங்கியாக்களையும், வங்கதேசத்தவரையும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் திட்டமிட்டு குடியேற்றியுள்ளனர். இவர்களைப் பயன்படுத்தி கலவரங்களை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த 8 வருடங்களில் ஏராளமான வங்கதேசத்தவரும், ரோஹிங்கியாக்களும் கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எங்கெல்லாம் ரோஹிங்கியாக்களும், வங்கதேசத்தவரும் குடியேறியுள்ளனரோ அங்கெல்லாம் பாஜகவினர் கலவரம் ஏற்படுத்தப் போகிறார்கள் அல்லது அவர்கள் நினைப்பதை சாதிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.
டெல்லியில் உள்ள மாநகராட்சிகளை கடந்த 15 வருடமாக பாஜகதான் தனது கையில் வைத்துள்ளது. அவர்கள்தான் சட்டவிரோத கட்டுமானங்களை அனுமதித்தனர். வேடிக்கை பார்த்தனர். இப்போது என்ன திடீரென இடிக்கக் கிளம்பியுள்ளனர். இந்த கட்டுமானங்களை லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதித்தவர்கள் பாஜக தலைவர்கள்தான். அவர்கள் மீதுதான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது வீடுகளைத்தான் முதலில் இடித்துத் தள்ள வேண்டும் என்றார் ராகவ் சத்தா.