புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்காக மக்கள் இனி அலைய வேண்டியதில்லை

சென்னை:

சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெரு நகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

இதில் பல்வேறு துறைகளில் அனுமதிபெற வேண்டி இருப்பதால் பொது மக்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் அவர்களுக்கு அலைச்சலும் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்து வருகிறது.

கட்டுமான நிறுவனத்தினர் இதுவரை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, காவல் துறை, இந்திய விமான நிலைய ஆணையம், இந்திய விமானப்படை, சென்னை மெட்ரோ ரெயில், பொதுப் பணித்துறை, இந்திய ரெயில்வே, தேசிய நினைவுச் சின்ன ஆணையம், இந்திய தொல்லியல் ஆய்வு, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் உள்பட பல்வேறு துறைகளில் அனுமதிபெற வேண்டி உள்ளது.

இதையடுத்து ஒற்றை சாளர முறையில் கட்டிட திட்ட அனுமதிகளை பொது மக்கள் 60 நாட்களுக்குள் ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதற்காக தமிழக தலைமை செயலாளர் கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் இணையதளத்தை தொடங்கவும், தடையில்லா சான்றுகளை பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும், துறைகளுக்கு உத்தரவிட்டார். அப்போது இதற்கான செயல்முறை தொடங்கியது. மேலும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே மாதத்தில் இந்த நடைமுறைக்கு ஒப்புதல் அளித்தார்.

கட்டிட திட்ட அனுமதிகளை பொதுமக்கள் ஆன்லைனில் பெறுவதற்கு வசதியாக சென்னை பெருநகர ஊரமைப்பு இயக்குனரகம் ‘கோ லைவ்’ என்ற இணைய தளத்தை தொடங்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தர விட்டது.

இதுதொடர்பாக அந்த துறையின் செயலாளர் ஹிதேஷ்குமார் மக்வானா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘ஏப்ரல் மாதத்துக்குள் ‘கோ லைவ்’ இணையதளத்துக்கான சோதனைகளை தொடங்க அனைத்து உள்ளூர் திட்ட அதிகாரிகளுக்கு நகர்ப்புற ஊரக இயக்ககம் உத்தரவிட வேண்டும்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் அவற்றை உடனடியாக செயல்படுத்தி அதன் மாதாந்திர அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர்-செயலாளர் அன்ஷூல் மிஸ்ரா கூறுகையில், ‘இணையதளத்தில் சோதனை செயல்முறையை தொடங்கி ஆவணங்களை பதிவேற்றி வருகிறோம்’ அதில் சில பிழைகளை சரி செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் விரைவில் இணையதளம் செயல்பாட்டுக்கு வரும்’ என்று தெரிவித்துள்ளார்.

இணையதளத்துக்கான சோதனைகளை இந்த மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், புதிய கட்டிடம் கட்ட அனுமதி பெறுவதற்காக பொதுமக்கள் இனி அலைய வேண்டிய தில்லை. மே1-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பித்து 60 நாட்களில் ஒப்புதல் பெறலாம்.

இதுகுறித்து கட்டுமான நிறுவனத்தினர் கூறுகையில், ‘ஒற்றைசாளர முறையில் அனைத்து நடவடிக்கைகளும் இணையதளத்தில் கொண்டு வரப்பட்டு 60 நாட்களுக்குள் ஒப்புதல் பெறும் நடவடிக்கை இந்த துறையை பெரிதும் மேம்படுத்தும்.

இது கட்டுமான துறையினரின் பிரச்சினைகளை குறைக்கும். ஏற்கனவே இதற்கு ஒப்புதல் பெற 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆனது. தற்போது 60 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்குவதால் கட்டுமானத் துறை வளர்ச்சி அடையும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.