விமான நிலைய சொத்துக்களை தனியாருக்கு மாற்றும் போது வரையறுக்கப்படும் மதிப்பில் ஒரு பங்கை மாநில அரசுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.
இந்த மாத இறுதிக்குள் 30.57 ஏக்கர் பட்டா நிலத்தை சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக தமிழக அரசு வழங்க உள்ள நிலையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்திற்காக (AAI) கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை முதலீட்டில் ஒரு பங்காக மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று செவ்வாய்கிழமை அன்று வெளியிட்ட தமிழக அரசின் தொழில்துறை கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை தனியாருக்கு மாற்றுவதற்கு முன் இந்த முதலீட்டிற்கு உண்டான வருவாயை மாநில அரசுடன் பகிர ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது அந்த நிலத்தின் மதிப்புக்கு ஈடான பங்குகளை தமிழக அரசுக்கு அந்த நிறுவனம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
2007ல் புதிய விமான நிலையங்கள் கட்டுவது மற்றும் ஏற்கனவே உள்ள விமான நிலையங்களை விரிவாக்குவது தொடர்பாக மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவின்படி, மாநிலங்கள் கணக்கற்ற நிலங்களை கையகப்படுத்தி, அவற்றை வளர்ச்சிக்காக ஏஏஐயிடம் ஒப்படைத்தன.
விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த நிலத்தின் மதிப்பைக் கொண்டே வியாபாரம் கனஜோராக நடப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக சென்னை விமான நிலையம் உள்ளது. இது 1,317 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது என்ற போதும் இந்தியாவின் மற்ற பெரிய விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் சிறிய நிலப்பரப்பு என்று கூறப்படுகிறது.
இதனால், புதிதாக எட்டு பார்க்கிங் பே உள்ளிட்ட விரிவாக்கப் பணிகளுக்காக AAI க்கு 93 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 83 ஏக்கர் நிலம் மாநில அரசின் நிலம். இதில் மணப்பாக்கத்தில் 50 ஏக்கர் நிலமும், கொளப்பாக்கத்தில் 30 ஏக்கர் நிலமும், கவுல் பஜாரில் 2.98 ஏக்கர் நிலமும் அடங்கும். இது தவிர மேலும் சில விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் தேவைப்படுவதாக AAI தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு இந்த நிலங்களுக்கு ஈடான மதிப்பை பகிர வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.