பாட்னா: பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அங்கு மதுவிற்பனை அமோகமாக நடப்பதாக பாஜக கூட்டணியில் உள்ள ஒன்றிய அமைச்சர் பசுபதி பராஸ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக – ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும்நிலையில், அம்மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், விஷ சாராயம் குடித்து மக்கள் பலியாவதும், கள்ளமார்க்கெட்டில் மதுபானங்கள் சப்ளையாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஒன்றிய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் (ஆர்எல்பி) தேசிய தலைவருமான பசுபதி பராஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பீகாரில் மது கிடைக்காது என்று யார் சொன்னது? பீகாரில் மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது; இதை யாரும் மறுக்க முடியாது. மதுவிலக்கு அமலில் இருப்பதற்கான உண்மை நிலையை எடுத்துக்காட்டுகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து பீகார் மாநிலத்துக்கு மதுபானம் கடத்தப்படுகிறது. அதனால்தான் மக்கள் தினமும் அதிக அளவில் மது அருந்துகிறார்கள். சட்டவிரோதமாக சப்ளை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கலப்பட மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்யும் மதுபான மாபியாக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்களுக்கு எதிராக ேபாலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.