கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சசிகலா நாளை (ஏப்ரல் 21) காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என நீலகிரி தனிப்படை போலீசார் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஏப்ரல் 23, 2017 அன்று நள்ளிரவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் அப்போது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதில் ஓம் பஹதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணதபா காயமடைந்தார்.
கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில், அங்கிருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல் வெளியானது.
இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் மரணம் அடைந்தார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை மெதுவாக நடைபெற்று வந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு கோடநாடு வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
ஏற்கெனவே, கோடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் காவல்துறை விசாரணை நடத்த உள்ளது. அதனால், கோடநாடு வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடத்த நாளை (ஏப்ரல் 21) காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என நீலகிரி தனிப்படை போலீசார் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“