மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோ எடுத்துவைத்துகொண்டு, வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார். மேலும் அந்த பெண் இரண்டு முறைக்கு மேல் தான் கர்ப்பமாகியிருப்பதாகவும், அந்த இளைஞரின் அழுத்தத்தின் காரணமாகக் கருவைக் கலைத்ததாகவும் தன் புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கில் அந்தப் பெண் குற்றம்சாட்டிய 25 வயது இளைஞர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுபோத் அபியங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதி, “அரசியலமைப்பின் பிரிவு 21, வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. சமீப காலமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்திருப்பதைக் கவனத்தில் கொள்ளும்போது, லிவ் இன் ரிலேஷன்ஷிப்-ஐ தடை செய்யலாம் என்ற வாதத்தை இந்த நீதிமன்றம் கவனிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த உறவுமுறை இந்தியச் சமூக நெறிமுறைகளை மூழ்கடித்து, பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது” என்றார்.