வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: ‘புதுச்சேரியில் சிறிதளவு கஞ்சா வைத்திருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். கஞ்சா தொடர்பாக மூன்று முறை வழக்கு பதிவாகும் நபர் மீது குண்டர் சட்டம் பாயும்’ என ஐ.ஜி., சந்திரன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கஞ்சாவை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கஞ்சா உற்பத்தி செய்ய முடியாது. வெளி மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது.
குறிப்பாக, ரயிலில் அதிகளவில் கடத்தி வரப்படுகிறது. அதனால், புதுச்சேரிக்கு வரும் அனைத்து வெளிமாநில ரயில்களையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பி., தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.சந்தேக நபர்களும் அவர்களின் உடமைகளும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.இதுவரை, குறைந்த அளவு கஞ்சா வைத்திருந்தால் வழக்கு போடுவதில்லை. ஆனால், இனி கஞ்சா விற்பவர் மட்டுமின்றி, பயன்படுத்துபவரும் கைது செய்யப்படுவர்.கஞ்சா பயன்படுத்துவோர் பள்ளி மாணவராக இருந்தாலும் கைது செய்யப்படுவர். இதனால், அவர்களின் எதிர்காலம் பாழாகும்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக போலீசார் பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முக்கிய பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.போதைப்பொருள் இல்லா புதுச்சேரியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
இதற்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.எனவே, போதைப் பொருள் தொடர்பாக பொதுமக்கள் 112 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது 9489205039 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம். இதில் கஞ்சா மட்டுமன்றி, எந்த பிரச்னையாக இருந்தாலும் தகவல் தெரிவிக்கலாம்.புகார் தெரிவித்த 10 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் இருப்பார்கள். அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மக்கள் தரும் தகவல் பாதுகாப்பாக இருக்கும். மேலும், தகவலின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவித்து கருத்து கேட்கப்படும்.கடந்த காலங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக பிடிபட்டவர்களில் 15 சதவீதத்தினர் மாணவர்கள் மற்றும் சிறுவர்களாகவே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்.
எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.கஞ்சா தொடர்பாக ஒருவர் மீது மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவர் மீது குண்டர் சட்டம் பாயும். மாநிலத்தில் சைபர் கிரைம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு ஐ.ஜி., கூறினார்.
Advertisement