நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் மின்சாரப் பயன்பாடு அபரிமிதமாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு தற்போது சீராகி வருவதால் தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களும் தங்கள் செயல்பாட்டை துரிதப்படுத்தி இருக்கின்றன. இதனால் நாட்டில் மின்சாரத் தேவை அதிகமாகி உள்ளது.
மேலும், மின் சேமிப்புக்காக பல மாநிலங்களில் தொடர்ந்து மின்வெட்டும் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, நாட்டில் மின்சாரத்துக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு குறைந்து வருவதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கடந்த சில தினங்களாக பரவி வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “கோல் இந்தியா பொதுத்துறை நிறுவனத்தில் 72.5 மெட்ரிக் டன் எரிபொருள் கையிருப்பில் இருக்கிறது. இதேபோல, நாட்டில் உள்ள மற்ற மின் நிலையங்களிலும் அதிக அளவில் நிலக்கரி இருக்கிறது.
அவற்றிடம் சராசரியாக 22 மெட்ரிக் டன் எரிக்கரி உள்ளது. எனவே நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் எழுவதற்கு வாய்ப்பே இல்லை. மின் நிலையங்களில் 10 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும், இந்தியாவில்அடுத்த 30 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும் கையிருப்பில் இருக்கின்றன. எனவே யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM