மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 24 ரன்கள், ஷாருக் கான் 12 ரன்கள், ராகுல் சாகர் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிருத்வி ஷா, டேவிட் வார்னர் இருவரும் அதிரடியாக ஆடி, ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் இணைந்து 83 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். பிருத்வி ஷா 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னருடன் சர்பராஸ் கான் இணைய, டெல்லி அணி 57 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை எட்டியது. ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்த டெல்லி அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 60 ரன்களுடனும், சர்பராஸ் கான் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.