கொரோனா பெருந்தொற்று ஓய்வதற்குள்ளாகவே ஐரோப்பிய எல்லையில் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய படையெடுப்பு போர் பீதியை மட்டுமல்லாமல் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய கவலையையும் உலக நாடுகளுக்கிடையே புகைய விட்டிருக்கும் வேலையில் பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் முதல் சுற்று நடந்து முடிந்திருக்கிறது…
தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்த “பூத் ஸ்லிப்” அட்டையை கண்டதும்தான் தேர்தல் ஞாபகமே வந்தது !
வழக்கம் போலவே ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலுக்கு, வழக்கம் போலவே ஞாயிறு மதியான குட்டித்தூக்கத்துக்கு பிறகு ஜனநாயக கடமையாற்ற சென்றேன் !…
வீட்டிலிருந்து சில அடிகள் தூரத்தில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடம்தான் எங்கள் பேட்டைக்கான தேர்தல் சாவடி ! பூத் பிரெசிடென்ட், பூத் செக்ரேட்டரி மற்றும் இரண்டு சாட்சிகள் தவிர ஈ காக்காய் கிடையாது ! “அரசியல் கட்சி ஈக்கள்” வாக்குச்சாவடியை மொய்க்காத காரணத்தாலோ என்னவோ கள்ள ஓட்டு சாகசங்களெல்லாம் கிடையாது. சாதாரண நாட்களில் தென்படும் காவல்துறை ரோந்து வாகனம் கூட அன்று கண்ணில் படவில்லை !
தேர்தல் அட்டையும் அடையாள அட்டையும் சரிபார்க்கப்பட்ட பிறகு, மறைவாக சென்று நாம் வாக்களிக்க விரும்பும் வாக்காளரின் பெயர் பதிந்த வாக்குச்சீட்டினை உறையில் பொதிந்து வாக்குப்பெட்டியில் போட்டுவிட்டு, பதிவேட்டில் கையெழுத்திட்டால் ஜனநாயக கடமை முடிந்தது. ஆமாம், கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இருக்கும் பிரான்ஸ் தேசத்தின் வாக்குச்சாவடிகளில் கூட இன்னமும் வாக்குச்சீட்டுகள்தான் ! கட்சி சின்னங்கள் கலர் படங்கள் எல்லாம் இல்லாத, வேட்பாளர் பெயர் மட்டுமே தாங்கிய கறுப்பு வெள்ளை வாக்குச்சீட்டுகள் !
இத்தனைக்கும் மின்னணு இயந்திரங்கள் சாத்தியமில்லை என்றெல்லாம் வாதிடும் அளவுக்கு ஒரே தேர்தலில் பல்வேறு நிர்வாக அமைப்பு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் அமெரிக்க தேர்தல் சிக்கல்களெல்லாம் பிரான்சில் கிடையாது !
கிளம்பும் போது வழக்கம் போலவே,
“ஓட்டு எண்ண உதவிக்கு வர முடியுமா ?!” எனும் சாவடி நிர்வாகிகளின் கோரிக்கை !
கட்சி பிரதிநிதி களேபரங்கள் எல்லாம் இல்லாத நாட்டில் ஓட்டு எண்ணக்கூட ஆட்களைக் கெஞ்ச வேண்டிய நிலை !
இந்தியாவின் பாரம்பரிய கட்சிகளைப் போலவோ அல்லது பிரிட்டனின் லேபர் கட்சியைப் போலவோ பிரான்ஸ் நாட்டில் நிலையான அரசியல் கட்சிகள் கிடையாது. மாற்றாக வலதுசாரி, தீவிர வலதுசாரி, இடதுசாரி, தீவிர இடதுசாரி என அரசியல் சித்தாந்தங்கள் கொண்ட குழுக்கள் ஒவ்வொரு முறையும் பிரதம வேட்பாளரின் தலைமையின் கீழ் ஒன்று சேரும். தேர்தலுக்கு தேர்தல் சித்தாந்தங்களின் அடிப்படையில் கூட்டணி காட்சிகள் மாறும் !
இந்திய ஆட்சிமுறையே பிரிட்டன் ஆட்சி முறை வழியில் அமைந்தது என்பதால் இங்கிலாந்தின் அரசியலமைப்பை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆனால் நெப்போலியன் காலத்தில் தொடங்கி, இதுவரையில் ஐந்து முறை அரசியல் சாசனம் திருத்தப்பட்ட பிரெஞ்சு குடியாட்சி முறை பிரிட்டனின் மாதிரிக்கு நேர் எதிர்.
ஜனநாயகத்தின் அடிப்படை விதிகளின்படி பிரான்ஸ் நாட்டிலும் யார் வேண்டுமானாலும் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடலாம் என்றாலும், அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் ஐந்நூறு பேரின் சிபாரிசு கையெழுத்துகளைப் பெற்றிருக்க வேண்டும் !
முதல் சுற்றில் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமாக ஒருவர் வாக்குகள் பெற்றால், அவர் வெல்வார். இல்லையென்றால் அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் அடுத்தகட்ட தேர்தலுக்கு போட்டியிடுவார்கள். மற்ற கட்சிகள் தங்களின் கொள்கைகளுக்கு ஏற்றபடி இருவரில் ஒருவரை ஆதரிக்கும் அல்லது அவரவர் விருப்பத்துக்கு தேர்வு செய்யும்படி தம் கட்சியினரை அறிவுறுத்தும் !
அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் மட்டுமே களைக்கட்டும். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றியும் அவர்கள் முன்வைக்கும் திட்டங்கள் பற்றியும் அரசியல் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நடக்கும். முதல் வாரம் நனைந்த கட்சி என்றால் அடுத்த வாரம் பாரபட்சமின்றி நனையாத கட்சி பற்றிய தொலைக்காட்சி கலந்துரையாடல். ஆட்சியிலிருக்கும் அதிபர் தொடங்கி, தல, தளபதி, பவர் ஸ்டார் என அனைவருக்குமே அரசு தொலைக்காட்சியில் ஒரே அளவு அலவன்ஸ் நேரம்தான் ! கூனி குறுகிய கும்பிடுகளெல்லாம் இல்லாமல், அதிபரும் “Monsieur le President”, அதாவது ” Mr. President ” என்றே அழைக்கப்படுவார் !
ஊர் சந்தைகளிலும் பொது இடங்களிலும் மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிப்பது மட்டுமே தன்னார்வலர்கள் என விளிக்கப்படும் தொண்டர்களின் வேலை. பெரும்பாலும் அனைத்து கட்சியினரும் ஒரே இடத்தில் நின்று அவரவர் கட்சியின் பிரசுரங்களை விநியோகிப்பார்கள். சோடா பாட்டில்களெல்லாம் பறக்காது !
பெருநகரங்களில் நிகழும் ஒன்றிரண்டு “மாஸ் காட்டும்” பெரும் பொதுக்கூட்டங்களை தவிர்த்தால், நகராட்சி மண்டபங்களில் ஆளுக்கு ஒரு வாரம் என கட்சியினர் கூட்டங்களை ஏற்பாடு செய்வார்கள். நூறு இருநூறு பேர் அமரக்கூடிய மண்டபங்களின் பெரும்பகுதி காலியாக இருக்கும். பேச வரும் தலைவர் கோபித்துக்கொண்டெல்லாம் போக மாட்டார் !
முதல் சுற்றுத் தேர்தலுக்கு முன்னர் அதிபர் வேட்பாளர்கள் அனைவருக்கும் தொலைக்காட்சி பேட்டிகள் கட்டாயம். அதே போல இறுதி சுற்றுக்கு முன்னர் முதல் சுற்றில் வென்ற இரு பிரதான வேட்பாளர்களின் நேரடி விவாதம். நொடிகளை முதற்கொண்டு கணக்கிட்டு இருவரும் விவாதிப்பதற்கு சம உரிமை ! 1974ம் ஆண்டிலிருந்து தொடரும் இந்த விவாதத்தில் சொதப்பிய எந்த வேட்பாளரும் வென்றதாக தெரியவில்லை !
நம் நாட்டு நோட்டா பிரான்சிலும் உண்டு. “VOTE BLANC, வெள்ளை ஓட்டு” என்று அழைக்கப்படும் பிரான்ஸ் நாட்டின் நோட்டாவுக்கு இந்திய நோட்டாவைவிட சற்று வலிமை அதிகம் ! வெள்ளை ஓட்டுப் பெரும்பான்மை பெறுமானால் வேறு வேட்பாளர்களுடன் மறுதேர்தல் நடத்தப்படும். அந்த இரண்டாம் தேர்தலிலும் வெள்ளை ஓட்டு பெரும்பான்மை பெறும் சூழலில் அதற்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஆனால் நடைமுறையில் இந்த வெள்ளை ஓட்டு அதிகபட்சம் இரண்டு சதவிகிதத்தை தாண்டியது கிடையாது !
அளவுகோல்களில் மட்டுமே மாற்றம்! வளராத நாட்டில் அடுத்தவேளைக்கான சாப்பாடு கிடைக்காதவன் வறுமைக் கோட்டுக்கு கீழிருப்பவன் என்றால் பிரான்ஸ் நாட்டில் குளிர்சாதனப்பெட்டி வாங்க இயலாதவன் ஏழை.
இதே போல உலகின் அனைத்து அரசியல்வாதிகளும் அச்சில் வார்த்தது போல ஒரே இனம் தான். சமதர்ம சமூக முன்னேற்றத்துக்கு மாற்றாக மக்களிடையேயான பிளவுகளைப் பெரிதுபடுத்துவதன் மூலமான பய அரசியல் தான் முன்னெடுக்கப்படுகிறது. அந்தந்த நாடுகளின் சூழல்களுக்கு ஏற்ப ஊழல்களின் “விஞ்ஞான” வழிமுறைகள் மட்டும் தான் மாறுகின்றன ! தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்துக்கொண்டிருக்கும் வாக்குச்சதவிகிதம் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை பொய்த்துக்கொண்டிருப்பதற்கான சாட்ச !
நடந்து முடிந்த முதல் சுற்றுத் தேர்தலில் தற்போதைய பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோன் முதல் இடத்தையும், தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மரீன் லுபென் எனும் பெண்மணி இரண்டாம் இடத்தையும் வென்றுள்ள நிலையில், இனவெறியை தூண்டும் பாசிச தீவிர வலதுசாரிகளிடம் ஆட்சியை கொடுத்துவிடாதீர்கள் எனும் குரல்கள் வழக்கம் போலவே ஒலிக்கத்தொடங்கிவிட்டன என்றாலும், தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவு தேர்தலுக்கு தேர்தல் பெருகிக்கொண்டு இருப்பது தான் நிதர்சனம் !
இரண்டாம் சுற்றில் வெற்றி பெறப்போவது யார் என்பது தெரியவில்லை, ஆனால் பிரான்ஸ் நாட்டின் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை இன்னும் நெரிக்கப்படவில்லை என்பதற்கான நடப்பு சான்றுகள் ஏராளம்!
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அதிபரின் கோட்டை பிடித்திழுத்து அவரை அறைய முற்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் விடுதலைசெய்யப்பட்டதுடன் மட்டுமல்லாமல் எந்த அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் அவன் அப்படிச் செயல்பட்டான் என்பதான அவனது வாக்குமூலமும் ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
இரண்டாம் கட்ட ஓட்டு வேட்டைக்காக நாட்டு மக்களைச் சந்திக்கும் அதிபரை நிறுத்தி,
“உங்களை போன்ற ஒரு மோசமான அதிபரை என் வாழ்நாளில் கண்டதில்லை !” என ஒரு குடிமகனால் கேட்க முடிகிறது. அந்த மனிதனுடன் நாட்டின் தலைவர் பொறுமையாக தர்க்கம் செய்வதும் நேரடியாக ஒலி, ஒளிபரப்பப்படுகிறது.
பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் மீது முட்டைகளையும் மாவையும் வீசி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்பவர்கள் “அரசியல் சித்தாந்தம் மற்றும் கலாச்சார” காவலர்களால் தாக்கப்படுவது கிடையாது ! அவர்கள் மீது தொடரப்படும் வழக்கின் அடிப்படையில் நீதிமன்ற தண்டனைகள் மட்டுமே !!
ஒரு கொசுறு தகவல்…
வெளிநாடுகளில் வாழும் பூர்வீக பிரெஞ்சு மக்கள் மட்டுமல்லாது, முன்னால் காலனியாதிக்கம் போன்ற காரணங்களால் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்பதால் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அதிகம் இருக்கும் பல்வேறு நாடுகளிலும் பிரான்ஸ் நாட்டு தூதரகங்களால் வாக்குச்சாவடி அமைக்கப்படும். இந்தியாவில் புதுவை மாநிலத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்காலுடன் சென்னையிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
புதுச்சேரியில் முதல் இடத்தை பிடித்தது தீவிர வலதுசாரியான மரீன் லுபென்!
“மண்ணின் மைந்தர்கள்” கோஷத்தை உயர்த்தி பிடிக்கும் இவரது கொள்கைகளில், “Immigrés” எனப்படும் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களின் உரிமைகளை கட்டுப்படுத்துவது முதன்மையானது !!
இந்த அரசியல் முரண்நகையை விவாதத்துக்கு உட்படுத்தினால் தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்கான ஆழமான காரணங்கள் புரியும் !
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.