உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தாக்கும் திறன் கொண்ட புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது.
Satan II என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக குறிப்பிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட எஞ்சிய உலக நாடுகள் இதை கருத்தில் கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக குறித்த ஏவுகணையானது உருவாக்கத்தில் இருந்து வந்துள்ளது.
அணு ஆயுதங்களுடன் பத்தாயிரம் கிலோ அளவுக்கு எடுத்துச் செல்லக் கூடிய இந்த ஏவுகணையானது ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறிவைக்கும் திறன் கொண்டது.
மேலும், சமகால ஏவுகணை தடுப்பு திட்டங்கள் அனைத்தையும் முறியடிக்கும் திறனும் Satan II ஏவுகணைக்கு இருப்பதாக விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் Satan II சிறப்பு வாய்ந்த ஏவுகணை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், இது ரஷ்யாவின் படைபலத்தை மேலும் அதிகரிக்க செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் அளிக்கலாம் என திட்டமிடும் அனைவருக்குமான பதில் இந்த Satan II ஏவுகணை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஏவுகணையானது 35.3 மீற்றர் நீளமும் 3 மீற்றர் விட்டமும் கொண்டது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், இந்த புதிய ஏவுகணையானது பல்வேறு விமானப் பாதைகளைப் பயன்படுத்தி நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது.