Actor And Director Bhagyaraj Speech About PM Modi :இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் மோடி குறித்து எழுதிய பதிவு பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பிரதமர் மோடி குறித்து பேசியது வைரலாக பரவி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா அம்பேத்கர் அண்ட் மோடி என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார். இதில் அம்பேத்கரின் சிந்தனைகளை பிரதமர் மோடி தனது செயலால் நிறைவேற்றி வருவதாக கூறியிருந்தார். சமீபத்தில் இந்த தகவல் வேகமாக பரவியதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் இளையராஜாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
தற்போது வரை இந்த சர்ச்சை ஓயாத நிலையில், இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்கள் புதிய இந்தியா 2022 என்றும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட நூலை இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து இந்த விழாவில் பேசிய பாக்யராஜ் கூறுகையில், பிரதமாரின் திட்டங்கள் குறித்து இந்த நூலை பெற்றுக்கொள்வதை பாக்யமாக கருதுகிறேன். பிரதமர் மோடியை குறை சொல்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பதே பலரின் குறையாக உள்ளது. அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு யார் உடம்பில் பலம் இருக்கிறது.
வெளிநாடு சென்று வந்தவர்கள் இரண்டு மூன்று நாட்கள் ஓய்வு எடுப்பார்கள். ஆனால் பிரதமர் மோடி வெளிநாடு சென்று வந்த உடனே கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சி என்றால் உடனடியாக வந்துவிடுவார். அவர் ஓய்வின்றி உழைக்கிறார் உடம்பை மிகவும் கவனமாக பார்த்தக்கொள்கிறார்.
எந்த பிரதமரால் அவரைப்போல் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இந்தியாவுக்கு இப்படி ஒரு சக்திமிக்கவர் வேண்டும். பிரதமர் பதவியில் இக்கட்டான நிலை வரும். இப்படி பேசினால் ஒருவருக்கு பிடிக்காது, மற்றொருவருக்கு சாதகமாக இருக்கும். விமர்சனம் செய்பவர்கள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். ஆனால் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் மோடி இருந்து வருகிறார்.
பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்தக்கொள்ள சொல்வேன். தாய் வயிற்றில் சிசுவுக்கு 4-வது மாதம் காது உருவாகும். 5-வது மாதம வாய் உருவாகும். ஆனால் மோடியை விமர்சனம் செய்பவர்கள் 3 மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்வேன்.
ஏனென்றால் நல்லதை இவனும் பேசமாட்டான் பிறர் பேசினாலும் காது கொடுத்து கேட்கமாட்டான். விமர்சனம் செய்பவர்களை பிரதமர் மோடி இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இளையராஜாவை தொடர்ந்து தற்போது பாக்யராஜின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“