ஹுப்பள்ளி:கிராமப்புற வேலை உறுதி திட்டமான ‘நரேகா’வின் கீழ் துவங்கப்பட்ட ‘உழைக்கலாம் வா’ திட்டத்துக்கு, ஹுப்பள்ளியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வெறும் 500 முதல் 1,500 பேர் மட்டும் பணிக்கு வருகின்றனர்.
நரேகா திட்டத்தின் கூலித்தொகை, 289 ரூபாயிலிருந்து, 309 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. பணியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், ‘உழைக்கலாம் வா’ என்ற திட்டத்தை, கர்நாடக அரசு செயல்படுத்துகிறது.பணிக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது.
பணியாற்றும் பெண்களிடம் சிறு குழந்தைகள் இருந்தால், இதை பார்த்துக்கொள்ள ஆயாக்கள் நியமிக்கப்படுகின்றனர்.குழந்தைகளுக்காக குடிநீர், நிழல் உட்பட, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வேலை தேடி வரும் ஆண்கள், பெண்கள் 5 கி.மீ.க்குள் இருந்து பணிக்கு வந்தால், அவர்களுக்கு பயணப்படி வழங்கப்படுகிறது.பணியில் பங்கேற்போருக்கு, ‘இ – ஷ்ரம்’ என்ற பெயரில் கார்டு வழங்கப்படுகிறது.
இதனால் அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற, உதவியாக இருக்கும்.பல சலுகைகள் அளிக்கப் பட்டும் ஹுப்பள்ளியில் மக்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை. இந்நகரில் 24 ஆயிரத்து 844 பேர், பணி கார்டு பெற்றுள்ளனர். ஆனால் பணிக்கு வருவது வெறும் 1,000 முதல் 1,500 பேர் மட்டுமே.
கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறையால், வயல் வரப்பு அமைப்பது, விவசாய குளங்கள் வெட்டுவது, ஏரி சீரமைப்பு, கிணறு தோண்டுவது, கால்வாய் அமைப்பது உட்பட, பல்வேறு பணிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நரேகா திட்டத்தின் உதவி இயக்குனர் சதானந்த அமராபுரா கூறுகையில், ”ஹுப்பள்ளியின் பல கிராமங்களில், பணிகள் நடந்துள்ளது. தினமும் 1,500 பேர் பணிக்கு வருகின்றனர். ”எத்தனை பேர் வந்தாலும், வேலை கொடுக்க தயாராக இருக்கிறோம். திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்.
Advertisement