இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,
“ஆளுநர் ஆர் என் ரவி தொடர்ந்து தமிழக மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக தலைமையிலான அரசுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக தமிழக மக்களிடையே ஆளுநர் மீது கடும் எதிர்ப்பும் கொந்தளிப்பான நிலையும் நிலவுகிறது.
இந்த நிலையில்தான் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆளுநர் அவர்களுக்கு, மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் காரணமாக, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 16 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு இருக்கிறார். இந்த நடவடிக்கையை கண்டித்து தான் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது .
ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட முறையில்தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்காக முதல்வர் முக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலை கூறுவதை அரைவேக்காட்டுத் தனமாக நான் கருதுகிறேன்.
மத்தியில் ஆட்சி செய்கிறோம் என்ற ஆணவத்தோடு அண்ணாமலை பேசுவார் ஆனால், ஏற்கனவே தமிழகத்தில் நுழையவிடாமல் பாஜகவை எதிர்த்து வரும் தமிழக மக்கள், பாஜக என்ற கட்சியை பூதக்கண்ணாடி கொண்டு தேட வேண்டிய சூழ்நிலை தள்ளுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” இவ்வாறு அந்த கே எஸ் அழகிரி தெரிவித்தார்.