மலேரியா நோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலை நிறுத்த வேண்டும் என்று பொது சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ். எம். ஆர்னோல்ட் தெரிவித்தார்.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…
உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் தொனிப்பொருளானது. புதிய அணுகுமுறையின் மூலம் மலேரியாவை ஒழிப்போம்’ என்பதாகும்.
மேலும், இதே தொனிப்பொருளில் இலங்கையிலும் மலேரியா தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் பதிவாகும் மலேரியா நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகின்றது .
அத்துடன், மலேரியா தொடர்பில் ,சுகாதாரத் துறை அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு பிரதான காரணம் இலங்கை மலேரியாவை ஒழித்த நாடுகளில் ஒன்றாக காணப்பட்டு வருவதாகும். அந்த சான்றிதழைப் பெற்ற நாடு என்ற வகையில் இலங்கை கடந்த 10 வருடங்களாக மலேரியா நோயைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்குள் மலேரியா நோயாளர்கள் பதிவாகவில்லை என்றாலும், மலேரியா பரவும் நாடுகளில் இருந்து நோயாளர்கள் வருகை தந்தால் மீண்டும் மலேரியா நோய் நம் நாட்டில் தலைதூக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மலேரியாவை பரப்பும் நுளம்புகள் நாட்டில் காணப்படுவதால், இந்நோய் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். எனவே வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மலேரியா கட்டுப்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுப்பது முக்கியமானது. இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.