21.04.2022
04.20: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். இது குறித்து பேசிய அதிபர் புதின், உண்மையான தனித்துவமான ஆயுதம் என்றும் இது ரஷிய ஆயுதப் படைகளின் போர் திறனை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரஷியாவின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையும் புதிய ஏவுகணை உறுதி செய்துள்ளது என்றும், ரஷியாவை தாக்க நினைக்கும் எதிரிகள் இது குறித்து
சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
02.20: மரியுபோலில் நகரில் உள்ள உக்ரைன் ராணுவத்தினர் சரண் அடைய ரஷியா விடுத்திருந்த கெடு நிறைவடைந்தது. இந்நிலையில் அசோவ்ஸ்டல் உருக்காலையை சுற்றி ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ளன. அதில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் வெளியேற முடியால் திணறி வருகின்றனர். உள்ளே இருக்கும் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நாங்கள் இன்னும் சில நாட்கள் அல்லது சில மணி நேரம் மட்டும் உயிரோடு இருப்போம் என கூறியுள்ளார்.
01.30: உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷிய படைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மரியுபோல் பகுதியில் நிலைமையை மிகவும் மோசமாக உள்ளது என்றும், டன்பாஸ் நகரை காப்பாற்ற கனரக ஆயுதங்களை வழங்குவதில் ஐரோப்பிய நட்பு நாடுகள் இனியும் தாமதம் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்,
12.40: உக்ரைன் விமான படைகளுக்கு உதிரி பாகங்கள் மீண்டும் கிடைத்து வருவதால், அந்நாட்டு விமானப்படையில் மேலும் 20 விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர். எனினும் எந்த நாடு உக்ரைனுக்கு விமான உதிரி பாகங்களை வழங்கியது என்பதை அந்த அதிகாரி குறிப்பிடவில்லை. அமெரிக்காவும் பிற நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
20.04.2022
21.30: ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ள மரியுபோல் நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம் நடைபெறவில்லை என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலைக்கு அடியில் சுமார் 1,000 பொதுமக்கள் தங்கியிருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
16.50: உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
16.30: உக்ரைனுக்கு நார்வே அரசு 100 வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புகிறது. பிரான்ஸ் தயாரிப்பான மிஸ்ட்ரல் குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும், அவை உக்ரைனுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் நார்வே பாதுகாப்புத்துறை மந்திரி கூறி உள்ளார்.
15.00: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வருடாந்திர வெள்ளை மாளிகை கூட்டத்தில் ராணுவத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். உக்ரைன் போர் ஆபத்தான கட்டத்தில் உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
13.18: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா 25% படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பலம் குறைந்து வருகிறது. இந்த சமயத்தில் உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அனுப்பிவைப்போம் என கூறியுள்ளது. அதேசமயம் உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, இன்றைக்குள் உக்ரைன் படைகள் சரணடியாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.