புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் தொற்று எண்ணிக்கை மெல்ல அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, டெல்லி, அரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், ‘கொரோனா அதிகரிக்கும் 5 மாநிலங்களிலும் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தொற்று பரவல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். உரிய நேரத்தில் சரியான சிகிச்சை, தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், மாஸ்க் அணிதல் ஆகியவை மிகவும் முக்கியம். 5 மாநிலங்கள் மட்டும் அல்லாமல், அனைத்து மாநிலங்களும் மருத்துவ கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 மாதத்திற்குப் பிறகு நாட்டில் கொரோனா ஆர் எண் மதிப்பு மீண்டும் 1 என்ற எண்ணிக்கையை தாண்டி இருப்பதாக சென்னை கணிதவியல் அறிவியல் மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஆர் எண் மதிப்பு என்பது கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை அதாவது, தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து புதிதாக எத்தனை பேருக்குப் பரவுகிறது என்பதைக் குறிக்கும். அந்த வகையில் ஆர் எண் ஒன்றுக்கு (1) குறைவாக இருந்தால், கொரோனா பரவல் வேகம் குறைவு, அதேசமயம், எண் ஒன்றுக்கு அதிகமாக இருந்தால், பரவல் வேகம் அதிகரித்துள்ளது எனக் கணக்கிடப்படுகிறது.இந்த வாரத்தில் ‘ஆர்’ மதிப்பு 1.28 ஆக இருந்ததாக ஆராய்ச்சியாளர் சீதாப்ரா சின்கா தெரிவித்துள்ளார். மும்பை, பெங்களூரு, சென்னையில் ‘ஆர்’ மதிப்பு 1 ஆக உள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் ஆர் மதிப்பு 2க்கும் மேல் உள்ளது. இதன் காரணமாக மீண்டும் கொரோனா 4ம் அலை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் கொரோனா 4ம் அலைக்கு வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படுகின்றன. தமிழகம், டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் பாதிப்பை பொறுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மறுபடியும் 2,000* கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்தது. ஒரே நாளில் 2,183 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை குறைந்து 1,247ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2067 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. * மொத்த உயிரிழப்பு 5,22,006 ஆக அதிகரித்துள்ளது. * சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,340 ஆக உயர்ந்துள்ளது. * டெல்லியில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மாதிரியை சோதனை செய்ததில் 97சதவீதம் பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. * மாஸ்க் அணியாவிட்டால் 500 அபராதம் கட்டணும்டெல்லியில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் விதிகளை பின்பற்றாமல் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காமல் தனித்தனி வகுப்புக்கள் இயக்க நடைமுறையை பின்பற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.