புதுடெல்லி: ராணுவ அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்கள் கசிந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சீனா மற்றும் பாகிஸ்தான் உளவு ஏஜென்டுகள் ஆன்லைன் மூலமாக இந்திய ராணுவ ரகசியங்களை பெறும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இந்திய ராணுவ அதிகாரிகளை, ஆன்லைன்மூலம் குறிவைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் இதுபோல் பல சம்பவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான் உளவு ஏஜென்டுகள் பெண்கள் பெயரில், இந்திய ராணுவ அதிகாரிகளை தொடர்புகொண்டு ரகசிய தகவல்களை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் குரூப் கேப்டனாக பணியாற்றிய ஒருவரே இந்த வலையில் சிக்கினார். இதனால் ராணுவத்தில் முக்கிய பணிகளில் ஈடுபடுவோர் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி ராணுவம் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.
இதேபோல் கடற்படையினரும் பேஸ்புக் பயன்படுத்த, இந்திய கடற்படை தடை விதித்துள்ளது. மேலும், கடற்படை தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் பணிக்கு செல்லும்போது ஸ்மார்ட் போன்களை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் இதர பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ராணுவ ரகசியங்கள் ஏதாவது கசிந்ததா என தற்போது விசாரணை நடந்து வருகிறது.