மும்பை :
நாட்டில் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக டெல்லியில் அதிகரித்து வரும் நோய் தொற்றை தொடர்ந்து, முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மீண்டும் வைரஸ் பரவி வருவது, 4-வது அலைக்கான அறிகுறியாக இருக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் 137 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 85 பேர் மும்பையில் பாதிக்கப்பட்டவர்கள். மகாராஷ்டிராவில் ஒரு நாள் பாதிப்பு 60 ஆயிரமாக இருந்ததையும் நாம் அனுபவித்து உள்ளோம். எனவே தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இதனால் மக்கள் பீதி அடைவதற்கான அவசியம் எழவில்லை.
நிலைமையை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேற்கத்திய நாடுகளில் நோய் தொற்று சற்று அதிகரித்து வருகிறது. மத்திய அரசு, ஐ.சி.எம்.ஆர்,, கொரோனா தடுப்பு பணிக்குழு, சுகாதாரத்துறை ஆகியவை தீவிர கண்காணிப்பில் உள்ளது. இந்த நிலையில் நாங்கள் சூழ்நிலையை பொறுத்து சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்போம்.
மகாராஷ்டிராவில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக உள்ளது. 12 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போட மாநில அரசு ஊக்கம் அளித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2-ந் தேதி முதல் முக கவசம் கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.